வாஷிங்டன்: ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீதான, 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும்-, பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், 'இஸ்ரேல் -- ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற, நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா?' என, பத்திரிகையாளர்கள் அதிபர் டிரம்பிடம் நேற்று கேள்வி எழுப்பினர். ஒப்புதல்
அதற்கு, ''என் பிரதிநிதிகள், காசா தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.''கத்தாரும், எகிப்தும், போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவை வழங்கும். மேற்காசியாவின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும்,'' என, எச்சரித்தார். பிணைக் கைதிகள்
இதற்கு இஸ்ரேல் தரப்பு பதில் அளிக்கவில்லை. அதே நேரம், தற்காலிக போர் நிறுத்தத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம். காசாவில் இருந்து இஸ்ரேலியர்கள் முழுமையாக வெளியேறுவதற்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஈடாக, மீதமுள்ள 50 பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.