இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொலை
காசா: ஹமாஸ் தளபதிகள் உட்பட 20 பயங்கரவாதிகள் ஒரே மாதத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்; 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ள இந்தப் போரில், இதுவரை 62,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய ஹமாஸ் தளபதிகள் கொல்லப் பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இஸ்ரேலில் 2023ல் அக்டோபர் 7ல் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றிய ஹமாஸ் தளபதி யுசுப் முகமது ஜூமா உள்ளிட்ட 20 பயங்கரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30 குடியிருப்பு கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்தது. ஹமாஸ் அமைப்பின் கடைசி பெரிய கோட்டையான காசா நகரத்தை விரைவில் கைப்பற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.