பிணை கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை
டெல் அவிவ்: காசாவில், ஹமாஸ் அமைப்பால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்கள் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவர் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத குழு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதில், இரு தரப்பினரிடையேயும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். விருப்பம் இதையடுத்து உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனடிப்படையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். இதற்கு இஸ்ரேல் சம்மதித்துள்ள நிலையில், ஹமாஸ் குறிப்பிட்ட அம்சங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாகவும், சில நிபந்தனைகளுக்கு பேச்சு நடத்த விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான பேச்சு எகிப்தில் நடக்கஇருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தின் சில அம்சங்களை பேச்சு நடத்தி இறுதி செய்வதற்காக, இஸ்ரேல் குழு எகிப்து சென்றுள்ளது. இந்த பேச்சை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதே எங்களின் நோக்கம். காசாவில் உள்ள அனைத்து பிணை கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவர் என இஸ்ரேல் நம்புகிறது. காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேறாது. அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், துாதரக ரீதியாகவோ அல்லது ராணுவ நடவடிக்கையின் வாயிலாகவோ ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க திட்டத்தின் முதற்கட்ட நகர்வுக்கு தயாராகுமாறு தங்களுக்கு தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. எதிர்பார்ப்பு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தற்காப்புக்காக மட்டுமே நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தீவிர தாக்குதல் எதுவும் நடத்தாது எனவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒருபுறம் பேச்சு நடத்த குழுவை இஸ்ரேல் அனுப்பினாலும், காசாவின் ஒரு சில இடங்களில் தாக்குதல் இன்னமும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி காசா நகரில் நடந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், துபா நகரின் மீதான தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 25 பேர் காயமுற்றதாகவும் அல்-அஹ்லி மருத்துவமனை இயக்குநர் படெல் நைம் தெரிவித்துள்ளார். இதற்கு, ஹமாஸ் உறுப்பினர்களை குறிவைத்தே ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில், பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது, இரு தரப்பும் அமைதி திட்டம் குறித்து பேச்சு நடத்த முன்வந்துள்ள நிலையில், பிணை கைதிகள் விடுதலை குறித்த இறுதி அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது-.