உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சச்சரவுகள், வேறுபாடுகளுக்கு பேச்சு வாயிலாகவே தீர்வு பிரிக்ஸ் கூட்டத்தில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

சச்சரவுகள், வேறுபாடுகளுக்கு பேச்சு வாயிலாகவே தீர்வு பிரிக்ஸ் கூட்டத்தில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

கஸான், ''சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் ஆகியவை தற்போது தவிர்க்க முடியாததாகி விட்டன. இதில், பேச்சு மற்றும் துாதரக உறவு வாயிலாகவே தீர்வு காணப்பட வேண்டும்,'' என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.ரஷ்யாவின் கஸான் நகரில், பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து மாநாடு தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில், 40 நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியா குட்டரஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியின் சார்பில் பங்கேற்ற நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:நாம், மிகவும் வித்தியாசமான ஒரு காலகட்டத்தில் உள்ளோம். நீண்டகால பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள, நம் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு தயாராக உள்ளோம் என்பதை உணர்த்தும் வகையில், இந்த கூட்டம் நடக்கிறது.தற்போது நாடுகளுக்கு இடையே மோதல்கள், பதற்றம், சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பிரதமர் மோடி கூறியதுபோல், இந்த யுகம் போருக்கானது அல்ல. எந்த ஒரு பிரச்னைக்கும், பேச்சு மற்றும் நாடுகளுக்கு இடையேயான துாதரக உறவு வாயிலாகவே தீர்வு காண வேண்டும்.அவ்வாறு உடன்பாடு ஏற்பட்டால், அதை முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டும். சர்வதேச விதிகளை எந்த ஒரு விலக்கும் இல்லாமல் அனைவரும் மதித்து நடக்க வேண்டும்; பயங்கரவாதத்தை சகித்து கொள்ளக்கூடாது.மேற்காசியாவில் உள்ள நிலவரம் கவலைக்குரியதாக உள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள போர் பதற்றம், விரிவடையும் அபாயம் உள்ளது.உலகமயமாக்கலின் பலன் சமநிலையில் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று, போர்கள் ஆகியவை, குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகப்பெரும் சுமையாக மாறிஉள்ளன. குறிப்பாக, பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளன.இந்த முரண்பாட்டை எப்படி சரிசெய்யப் போகிறோம்; உலகளாவிய சமத்துவ நிலையை எப்படி உருவாக்கப் போகிறோம் என்பவையே நம் முன் உள்ள கேள்விகள். காலனித்துவ ஆட்சியின்போது இருந்த உலகளாவிய கட்டமைப்பை திசைதிருப்பும் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் இணைந்திருக்க வேண்டும்.பொதுவான நோக்கத்துக்காக கூட்டு முயற்சிகள் தேவை. மற்ற நாடுகளின் எல்லைகள் மற்றும் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பல நாடுகள் அடங்கிய அமைப்புகள், காலாவதியாகிவிட்டன. தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப, அவற்றில் சீர்திருத்தம் தேவை.இவ்வாறு அவர் பேசினார்.

சீனா நம்பிக்கை!

இந்தியா, சீனா எல்லையில், 2020ல் இருந்த நிலையில் ரோந்து பணிகளை தொடர்வதற்கு சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், கஸானில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் நேற்று முன்தினம் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக பேசினர்.இதுகுறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் நேற்று கூறியதாவது:இரு தலைவர்களின் சந்திப்பு, இருதரப்பு உறவை புதுப்பித்துக் கொள்வதற்கு முக்கியமான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது; இது முக்கியமான முன்னேற்றம். இரு நாட்டுக்கும் இடையேயான உறவை, முன்பு போலவே சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வதற்கு, பொதுவான புரிதல்கள் தேவை என்பதை, இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இது, இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான பாதையை ஏற்படுத்தி தந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை