2011 விபத்தால் நிறுத்தப்பட்டது மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்க ஜப்பான் முடிவு
டோக்கியோ: கடந்த 2011ம் ஆண்டு நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், புகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சு பாதிப்பைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த அணுமின் உற்பத்தியை, உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் துவக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானி ல் குறிப்பிடத்தக்க இயற்கை எரிவாயு வளங்கள் இல்லாததால், இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோல், டீசலையே, எரிபொருட்களுக்காக நம்பியிருந்தது. இதை குறைக்கும் முயற் சியாக அணு சக்தியை பயன்படுத்த துவங்கியது. இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள மூன்று அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டது. கதிர்வீச்சு கசிந்ததால், அது மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பான் முழுதும் அணு உலை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், நிகாட்டா மா காணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி - காரிவா அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை மீண்டும் துவக்க அம்மாகாணத்தின் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், 6 அணு உலையில் மின் உற்பத்தி துவங்க தயாராக உள்ளதாகவும், இதன்பின் 7வது அணு உலையில் மின் உற்பத்தி துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அனுமதி, இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்தால், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த அணு உலை செயல் பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியிலேயே துவங்கவும் வாய்ப்பிருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.