உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லிபியா தலைநகர் டிரிபோலியை அழிக்க கடாபி திட்டம் : ரஷ்ய சிறப்பு தூதர் தகவல்

லிபியா தலைநகர் டிரிபோலியை அழிக்க கடாபி திட்டம் : ரஷ்ய சிறப்பு தூதர் தகவல்

டிரிபோலி : ''லிபியா தலைநகர் டிரிபோலியை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினால், ஏவுகணை தாக்குதல் நடத்தி, அந்நகரை அழிக்க கடாபி திட்டமிட்டுள்ளார். கடாபியிடம் இன்னும் ஏராளமான ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளன. இதுவரை நடந்த தாக்குதல்களில், ஏவுகணைகளை கடாபி பயன்படுத்தவில்லை,'' என, லிபியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கேல் மெர்கெலோவ் கூறினார். லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக, அந்நாட்டில் கிளர்ச்சி நடக்கிறது. நேட்டோ படைகளுடன் சண்டையிட்டு வரும் லிபியா அரசுக்கு, தற்போது பல வழிகளிலும் சிக்கல் எழுந்துள்ளது. கடாபிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த 4ம் தேதி, துருக்கி அரசு வாபஸ் பெற்றது. இதனால், கடாபிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள துருக்கி - லிபியா வங்கியில், லிபியா அரசின் பணம் டிபாசிட் செய்யப்பட்டிருந்தது. இந்தப் பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை, கடாபிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல், வெறும் வாக்குறுதி பத்திரங்களை மட்டுமே கடாபி அளித்து வருகிறார். சமீபத்தில், லிபியா அரசின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை, கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதனால், விரைவில் லிபியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று, அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், லிபியாவின் மேற்கில் உள்ள குவாலிஷ் நகரை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். டிரிபோலியிலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள குவாலிஷ் நகரை கைப்பற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், கடாபியின் ஆதரவாளர்களுக்கும் இடை யே பயங்கர சண்டை நடந்தது. இதன் முடிவாக நகரை கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கைப்பற்றினர். குவாலிஷ் நகரம் வீழ்ந்து விட்டதால், தலைநகர் டிரிபோலியை எளிதில் கைப்பற்றும் வகையில், அசாபா மற்றும் கர்யான் நகரங்களை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முனைப்புடன் போரிட்டு வருகின்றனர். இதற்கிடையில், லிபியாவிற்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கேல் மெர்கெலோவ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விவரம் ரஷ்ய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில், மெர்கெலோவ், ''லிபியா தலைநகர் டிரிபோலி, கிளர்ச்சியாளர்கள் கையில் வீழ்ந்தால், தற்கொலைப் படைத் திட்டம் ஒன்றை செயல்படுத்த, கடாபி திட்டமிட்டுள்ளார். அதாவது, நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி, டிரிபோலியை தகர்க்க திட்டமிட்டுள்ளார். இதை,கடாபியே என்னிடம் தெரிவித்தார். கடாபி இதுவரை ஏவுகணைகள் எதையும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை,'' என்றார்.

லிபியா தலைவர் கடாபியை வெளியேற்றி, கிளர்ச்சியாளர்களை வலுப்படுத்தும் வகையில் இஸ்தான்புலில், நேட்டோ அமைப்பு நாடுகளின் கூட்டம் நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜூப்பி, இத்தாலி வெளியுறவு அமைச்சர் பிராங்கோ பிராட்டினி, லிபியா ஆட்சி மாற்றக் கவுன்சில் தலைவரும், வெளியுறவு அமைச்சருமான மஹ்முத் ஜிப்ரில் ஆகியோர் கலந்து கொண்டனர்.லிபியாவில், கடாபியை எதிர்த்து போரிட்டு வரும், நேட்டோ படைக்கு, கூடுதலாக நான்கு போர் விமானங்கள் வழங்கப்படும் என்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை