மெக்சிகோவில் 300 ஏக்கரில் கஞ்சா செடிகள்: ராணுவத்தினர் அதிர்ச்சி
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததை அந்நாட்டு ராணுவத்தினர் கண்டறிந்து அதனை அழிக்கும் முயற்சியி்ல் இறங்கியுள்ளனர். மெக்சிகோ போதை மருந்து கடத்தலுக்கு பெயர்போன நாடாக திகழ்கிறது. இங்குள்ள சில மாகாணங்களில் போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவர்களிடையே வன்முறையும் , கொடூர கொலைகளும் அரங்கேறி வருகின்றன. அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக போதை மருந்து கடத்தல் தொழில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவின் வடகிழக்கு மாகாணமான பார்ஜா கலிபோர்னியாவில் ஷான்கூயின்டின் நகரில் ஏறத்தாழ 300 ஏக்கர் பரப்பளவில் (1.2 சதுர கி.மீ) மாரிஜூனா எனும் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தை , அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்த ராணுவத்தினர் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி கூறுகையில், நாட்டில் இந்த அளவுக்கு 300 ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது இது தான் முதல் தடவை , அதுவும் கஞ்சா செடிகள் நன்கு வளர்த்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. தற்போது இப்பகுதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி நில உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார். இச்செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.