அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான, 'ஸ்ட்ரேடஸ்' வேகமாக பரவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது வடிவமாகும். இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி., என கொடுக்கப்பட்டுள்ளது. இது, ஒரு கலப்பின வைரஸ் என கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதை, 'கண்காணிப்பட வேண்டிய உருமாறிய வைரஸ்' என வகைப்படுத்தியுள்ளது. அ மெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சுகாதார ஆபத்து என்பது குறைவாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஏற்கனவே உடல்நல குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சற்று கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறுகின்றனர். தற்போது அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், வெர்மான்ட், மிச்சிகன், விஸ்கான்சின், மினிசோட்டா மற்றும் வடக்கு, தெற்கு டகோட்டா போன்ற மாகாணங்களில் இந்த வைரஸ் தாக்குதல் வேகமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.