| ADDED : அக் 14, 2025 06:08 AM
ஸ்டாக்ஹோம்; புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக மூவருக்கு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானியும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக, நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. உலகின் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது. நடப்பாண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வுக்காக மூவருக்கு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பிலிப் அகியான், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் மோகிர் மற்றும் பீட்டர் ஹோவிட் இந்த விருதை பெற உள்ளனர். ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.