சமரசத்தை ஏற்காவிட்டால் ஆட்சி மாற்றம் தலிபான்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: 'சமரசம் செய்யுங்கள் அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்' என, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதற்கு, இரு நாட்டு எல்லையில் இருந்து இயங்கி வரும் டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத குழுவே காரணம். வான்வழி தாக்குதல் ஆப்கனின் சர்வதேச எல்லைக்கோடாக குறிக்கப்படும் டூரண்டோ எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் செயல்பட்டு வரும் இக்குழு, பழமைவாத இஸ்லாமிய ஆட்சியை பாகிஸ்தானில் நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. டி.டி.பி., குழு ஆப்கனில் இருந்து கொண்டு பாகிஸ்தானில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்துமாறு பலமுறை ஆப்கன் தலிபான் அரசை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. இருந்தும் அந்த அமைப்பின் செயல்பாடுகளை ஆப்கானிஸ்தானால் கட்டுப்படுத்த இயலவில்லை. சமீபத்தில், பாகிஸ்தான் எல்லை தாண்டி சென்று ஆப்கனில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. மூன்று சுற்று பேச்சு நடந்த நிலையில், இருதரப்பும் அதில் முன்னேற்றம் காண தவறிவிட்டன. இதையடுத்து, முந்தைய பேச்சின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தம், இஸ்தான்புல் பேச்சின் போது ஏற்பட்ட தோல்வியால் கைவிடப்பட்டது. ஆப்கனுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்திய போது, 'டி.டி.பி.,க்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், டி.டி.பி., போராளிகளை ஒப்படைக்க வேண்டும், எல்லைக்கோட்டு பதற்றத்தை அதிகரிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாதுகாப்பு அச்சுறுத்தல் 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஒரு தடுப்பு பகுதி யை உருவாக்க வேண்டும் மற்றும் வர்த்தகம், இருதரப்பு ஒத்துழைப்பை இயல்பாக்க வேண்டும்' என்ற சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது. ஆனால், இந்த நிபந்தனைகளில் குறிப்பாக டி.டி.பி., போராளிகளை ஒப்படைத்தல் மற்றும் தடுப்பு பகுதிகளை உருவாக்குதல் தொடர்பான திட்டங்களை ஆப்கன் எதிர்த்து வருகிறது. இந்நிலையில், தங்கள் மீதான தொடர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத பாகிஸ்தான், 'சமரசம் செய்யுங்கள் அல்லது ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்ளுங்கள்' என, ஆப்கன் தலிபான் அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. ச மீபத்தில், ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச் சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்திருந்தார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்திச் சென்றார். ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் நெருங்கி வருவது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆப்கனுடன் நீண்டகாலமாக கடைப்பிடித்து வந்த உறவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் தற்போது தலிபானின் நிலைபாட்டை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கிறது. புவிசார் அரசியல் அவமதிப்பாகவும் கருதுகிறது. இதன் விளைவாக ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள தலிபான் எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு குழுக்களுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்த துவங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் உளவு அமைப்பு, முக்கியமான ஆப்கன் ஜனநாயக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளது. இதன்படி, ஹமீத் கர்சாய், அஷ்ரப் கனி, அஹ்மத் மசூத், அப்துல் ரஷீத் தோஸ்தம், ஆப்கானிஸ்தான் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் மற்றும் வடக்கு கூட்டணி தளபதிகள் உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள். இத்தலைவர்களுக்கு அரசியல் இடம், பாதுகாப்பான இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு அலுவலகம் உள்ளிட்டவற்றை வழங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் எதிர்ப்பு பிரிவுகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் இம்முடிவு, 2021ல் ஆப்கன் வீழ்ச்சிக்கு பின், பாக்., எடுக்கும் மிக முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.