உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கஜகஸ்தானில் விமானம் வெடித்து சிதறியதில் 38 பேர் பலி !  தரையிறக்க முயற்சித்த போது நேர்ந்த கொடூரம்

 கஜகஸ்தானில் விமானம் வெடித்து சிதறியதில் 38 பேர் பலி !  தரையிறக்க முயற்சித்த போது நேர்ந்த கொடூரம்

மாஸ்கோ: அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு 67 பேருடன் புறப்பட்ட பயணியர் விமானம், கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் விபத்துக்கு உள்ளானதில், இரு விமானியர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்; அதிர்ஷ்டவசமாக 29 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்த போது, இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.ஐரோப்பிய நாடான அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், 'எம்ப்ரேயர் - 190' ரக பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில், 62 பயணியர், இரு விமானியர், மூன்று விமான ஊழியர்கள் என, மொத்தம் 67 பேர் இருந்தனர். மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் வான் பரப்பில் பறந்த இந்த விமானம், அந்நாட்டின் அக்டாவ் நகரில் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளானது. இதில் விமானம் இரு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்தில், இரு விமானியர் உட்பட 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக 29 பயணியர் உயிர் பிழைத்தனர். விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பறவை மோதல்?

விபத்து குறித்து தகவலறிந்த கஜகஸ்தான் அவசரகால அமைச்சகம், மீட்புப் பணிகளை முடுக்கி விட்டது. காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினர், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி, விமானத்தில் அஜர்பைஜானைச் சேர்ந்த 42 பேர்; ரஷ்யாவைச் சேர்ந்த 16 பேர்; கஜகஸ்தானைச் சேர்ந்த ஆறு பேர்; கிர்கிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். விமானத்தின் மீது பறவை மோதியதால் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனால், அக்டாவ் நகரில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக விமானம் வெடித்து சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன், அக்டாவ் நகரில் வானில் பல முறை வட்டம் அடித்ததாகவும், மேலே, கீழே என இறங்கி பறந்ததாகவும், கடும் பனிமூட்டம் காரணமாக அக்டாவ் நகருக்கு திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமான சேவைகளை வழங்கும் 'பிளைட்ரேடார் 24' தளம், விபத்துக்குள்ளான விமானம் ஜி.பி.எஸ்., சிக்னல் நெருக்கடியை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகள் விசாரணை

அக்டாவ் நகரில் இருந்து 3 கி.மீ., தொலைவில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முயன்றதாகவும், இது குறித்த அனைத்து தகவல்களும் உடனடியாக வழங்கப்படும் என்றும் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விமான விபத்து குறித்து அஜர்பைஜான், கஜகஸ்தான் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு பயணம் செய்த அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், விபத்து குறித்து அறிந்ததும் நாட்டுக்கு உடனடியாக திரும்பினார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

உயிர் பிழைத்த 29 பயணியர்

அக்டாவ் நகரில் நிகழ்ந்த விமான விபத்தில்,29 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 11 வயது சிறுமி, 16 வயது இளம்பெண் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். காயமடைந்த பயணியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் விமானம் இரு பாகங்களாக உடைந்த நிலையில், உயிர் தப்பிய பயணியர், விமானத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியேறியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ