ஓராண்டில் 40,000 போன்கள் திருட்டு கடத்தல் கும்பலை பிடித்தது போலீஸ்
லண்டன்:பிரிட்டன் போலீசாருக்கு நீண்ட காலமாக இருந்த மிகப்பெரிய தலைவலி வழக்கில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. விசாரணையின்போது, அவர்களுக்கு தலைசுற்றும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், குறிப்பாக லண்டனில் அதிகளவில் மொபைல் போன்கள் காணாமல் போயின அல்லது திருடப்பட்டன. குறிப்பாக, 'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஐபோன்' என்ற மொபைல் போன்கள் திருடப்பட்டன. இது தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தியும் போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பரில், மொபைல் போனை இழந்த ஒருவர், தன் மொபைல் போன், ஹீத்ரூ விமான நிலையத்தின் கிடங்கில் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்தாக போலீசாருக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு பார்சலில், 900 ஆப்பிள் மொபைல் போன்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, 'ஈக்கோஸ்டீப்' என்ற பெயரில் தீவிர விசாரணை துவங்கியது. போலீசார் நடத்திய விசாரணையில், லண்டன் மற்றும் பிரிட்டனில் இருந்து திருடப்படும் மொபைல் போன்கள், சீனா மற்றும் ஹாங்காங்குக்கு கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். முதலில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் சிக்கினர். அவர்கள் அளித்த தகவலின்படி, சில நுாறு மொபைல் போன்களை கண்டுபிடித்தனர். அடுத்ததாக, பிரிட்டனில் உள்ள இந்தியர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் மட்டும், 4,000 போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு கடந்த ஓர் ஆண்டாக நடந்த விசாரணைகளில், 40,000 மொபைல் போன்கள் திருடப்பட்டு, சீனாவுக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக இந்தியர் உட்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர். சீனாவில் நல்ல விலை கிடைப்பதால், ஆப்பிள் மொபைல் போன்களை திருடி, கடத்தலில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.