உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் போராட்டம்; பாசிசத்தை தடுப்போம் என முழக்கம்

அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் போராட்டம்; பாசிசத்தை தடுப்போம் என முழக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்கு எதிராக பெரும் திரளான மக்கள், 'மன்னர்கள் வேண்டாம்' என்ற வாசகத்துடன் நாடு முழுதும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றார். அவர் ஆட்சிக்கு வந்த பின், பல்வேறு விவகாரங்களில் புதிய கொள்கை முடிவுகளை எடுத்துள்ளார். அவற்றை பார்லிமென்ட் ஒப்புதலின்றி நிர்வாக உத்தரவுகளால் செயல்படுத்தி வருகிறார். இதனால் பலர் அவரை, 'அதிபர் அல்ல, மன்னர் போல நடக்கிறார்' என குற்றஞ்சாட்டு கின்றனர். புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, மக்களுக்கான சுகாதார செலவுகளை குறைத்தல், அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பை குறைத்தல், எதிர்க்கட்சி ஆளும் மாகாணங்களில் ராணுவத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு எதிராக நேற்று முன்தினம் அமெரிக்காவின், 2,600 நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்டன், சிகாகோ, அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் என முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டனர். 'மன்னர்கள் வேண்டாம்' மற்றும் 'போராட்டமே உண்மையான தேசப்பற்று' ஆகிய பதாகைகளுடன் அவர்கள் பேரணியாக சென்றனர். 'பாசிசத்தை தடுத்திடுவோம்' எனவும் கோஷம் எழுப்பினர். நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்பதை குறிப்பதற்காக சிலர் சுதந்திர தேவி சிலை போல் வேடமணிந்து பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய தாவது: அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. சட்டம் இயற்றாமல் புலம்பெயர்ந்தோரை தடுப்பது, நகரங்களுக்குள் ராணுவத்தினரை அனுப்புவது போன்றவை அமெரிக்காவின் அடிப்படை மதிப்புகளுக்கு விரோதமானவை. டிரம்பை வெறுப்பதால் நாங்கள் இங்கு திரளவில்லை. அமெரிக்காவை நேசிப்பதால் இங்கு உள்ளோம். நாட்டின் ஆட்சி மக்கள் கையில் இருக்க வேண்டும்; மன்னர் கையில் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். நாடு முழுதும் பெரிய அளவில் போராட்டம் நடந்தாலும், அனைத்தும் அமைதியாகவே நடந்து முடிந்தது. எங்கும் பெரிதாக கைது நடவடிக்கைகள் இல்லை. அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், 'அவர்கள் என்னை மன்னன் என்று சொல்கின்றனர். நான் மன்னன் இல்லை' என்றார். டிரம்பின் ஆதரவாளர்கள் 'இந்த போராட்டம் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் இயக்கத்தால் நடத்தப்படுகிறது. அவர்களால் தான் பார்லிமென்டில் பட்ஜெட் மசோதா நிறைவேறாமல் நாட்டின் அரசு அலுவலகங்கள் முடங்கி உள்ளன. அவர்கள் அமெரிக்காவை நேசிப்பவர்கள் அல்ல; வெறுப்பவர்கள்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை