| ADDED : மார் 28, 2025 10:07 PM
காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு பல இடங்களில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.நேபாளத்தில், 2007ல், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008ல் குடியரசு உருவானது. ஜனநாயக நடைமுறை படி நடந்த தேர்தல் நடந்தாலும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுவதும், பிரதமர்கள் பதவி விலகுவதும் , ராஜினாமா செய்வதும் என அரசியல் குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்நாட்டில் அடிக்கடி போராட்டம் நடந்து வருகிறது.அந்த வகையில் இன்று(மார்ச்28) நேபாளத்தில் நடந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் நாச வேலையிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இதில் போராட்டக்காரர் ஒருவர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.பதற்றத்தை தணிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், காத்மாண்டுவின் முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.