மேலும் செய்திகள்
பி.பி.சி., இயக்குநர் திடீர் ராஜினாமா
1 hour(s) ago
மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நடவடிக்கை கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ளது. இந்நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போனது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சு நடத்தினார். ஆனால், பல மாதங்கள் கழிந்தும், இந்த விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாய் எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே இருந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையில் எடுத்தார். ரஷ்யாவை பணிய வைக்க, அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரியை அறிவித்தார். இருந்தாலும், ரஷ்யா மசிந்து கொ டுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, மேற்காசிய நாடான இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு முன்மொழியப்பட்ட அமைதி திட்டம் போன்று, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்துள்ள, இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை போர் நிறுத்தத்திற்கான துவக்க புள்ளியாக ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் இந்த சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறும் எனவும், குபியான்ஸ்க் நகரை கைப்பற்றியது போல் மற்ற முக்கிய பகுதிகளையும் கைப்பற்றுவோம் என புடின் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார். எதிர்ப்பு டிரம்பின் சமாதான திட்டத்தில் ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதால், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய மதிப்பை இழக்க நேரிடும் எனவும், இந்த சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தினால், நீண்டகால நட்பை அமெரிக்கா இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் நலன்களுக்கு துரோகம் இழைக்காத மாற்று திட்டங்களை முன்வைக்க விரும்புவதாக அவர் உறுதியளித்து உள்ளார். மேலும், இந்த முன்மொழிவு ஐரோப்பிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும், பரந்த பாதுகாப்பையும் பலவீனப்படுத்தக்கூடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்நிலையில், இந்த சமாதான திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உக்ரைனை வலியுறுத்திஉள்ளது.
1 hour(s) ago