உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடியின் பயணத்தை தொடர்ந்து 11 மீனவர்களை விடுவித்தது இலங்கை

மோடியின் பயணத்தை தொடர்ந்து 11 மீனவர்களை விடுவித்தது இலங்கை

கொழும்பு: இலங்கை சென்றிருந்த நம் பிரதமர் நரேந்திர மோடி, 'மீனவர் பிரச்னையில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதுடன், படகுகளையும் விடுவிக்க வேண்டும்' என, வலியுறுத்தியதை ஏற்று, சிறப்பு நிகழ்வாக, 11 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக, நம் அண்டை நாடான இலங்கைக்கு சென்றார். பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகேவை சந்தித்து பேசினார்.அப்போது, இலங்கை வாழ் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. அதிகாரப் பகிர்வு அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 13வது பிரிவை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.இதைத் தவிர, மீனவர் பிரச்னை குறித்தும் மோடி ஆலோசனை நடத்தினார். 'மீனவர்கள் பிரச்னை குறித்தும், அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது' என, சந்திப்புக்குப் பின் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தியதாக மோடி தெரிவித்தார்.மூன்று நாள் பயணத்தை முடித்து, மோடி நேற்று அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே, இலங்கை அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது.சிறப்பு நிகழ்வாக, 11 மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி, வடமத்திய இலங்கையின் அனுராதபுரத்துக்கு மோடி சென்றார். திசநாயகேவும் உடன் சென்றார். அங்கு இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மோடி துவக்கி வைத்தார்.மேலும் அங்குள்ள புத்த மத தலமான ஸ்ரீ மகா போதி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

ராமர் பாலம் தரிசனம்

சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:இலங்கையில் இருந்து ெஹலிகாப்டரில் நாடு திரும்பும் வழியில், ராம சேது எனப்படும் ராமர் பாலத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ராம நவமியன்று, உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது, சூரிய கதிர்கள், திலகம் போல் ஒளிர்ந்தது. ஒரு பக்கம் அந்தக் காட்சியை பார்த்தேன். மறுபக்கம், ராமர் பாலத்தை நேரடியாக பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன். இது ஒரு எதிர்பாராத தெய்வீக ஒற்றுமை. பகவான் ராமர், நம் அனைவரையும் இணைக்கும் சக்தியாக விளங்குகிறார். அவருடைய அருள் எப்போதும் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஏப் 07, 2025 17:45

மோடியின் பயணத்தை தொடர்ந்து 11 மீனவர்களை விடுவித்தது இலங்கை இல்லை இல்லை அப்பாவின் கூக்குரலால்தான் இந்த விடுதல் கிடைத்தது என்று சொல்ல எதிர்பார்க்கிறார் நமது அப்பா ஆனால் ஒருவருமே அப்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள் உண்மையைத்தான் சொல்வார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை