உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கை புதிய அமைச்சரவை பதவியேற்பு

இலங்கை புதிய அமைச்சரவை பதவியேற்பு

கொழும்பு,இலங்கையில் அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில், 21 பேர் அடங்கிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இதில், பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றுள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார்.

அபார வெற்றி

பார்லி.,யில், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் மட்டுமே இருந்ததால், பார்லி.,யை கலைத்து உத்தரவிட்ட அவர், நவ., 14ல் தேர்தல் நடக்கும் என அறிவித்தார். இதன்படி, கடந்த 14ல் நடந்த பார்லி., தேர்தலில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில், 159ஐ கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அரசில், 21 பேர் அடங்கிய அமைச்சரவையை நியமித்து, அதிபர் அனுரா குமார திசநாயகே உத்தரவிட்டார்.

2 தமிழர்கள்

தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று நடந்தது. அப்போது, இரு பெண்கள் உட்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 12 பேர் புதுமுகங்கள். இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றார். இவருக்கு உயர் கல்வி, தொழிற்கல்வித் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரியா பெற்றுள்ளார்.விஜித ஹேரத் - வெளியுறவு; சரோஜா சாவித்ரி பால்ராஜ் - பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரம்; கே.டி.லால்காந்த - விவசாயம், நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். ராமலிங்கம் சந்திரசேகர் - மீன் வளம்; பிமல் ரத்நாயக்க - விமானப் போக்குவரத்து; நலிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதிபர் திசநாயகே தலைமையிலான புதிய அமைச்சரவையில், தமிழர்கள் சரோஜா சாவித்ரி பால்ராஜ், ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ