மாணவர் அமைப்புத் தலைவர் கொலையில் திருப்பம்; தேர்தலை நிறுத்த இடைக்கால அரசு முயற்சிப்பதாக புகார்
டாக்கா: வங்கதேசத்தில் பிப்ரவரியில் நடக்க உள்ள பொதுத்தேர்தலை குலைப்பதற்காக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, மாணவர் அமைப்பின் தலைவர் ஓஸ்மான் ஹாதியை கொலை செய்துவிட்டதாக அவரது சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் நாட்டைவிட்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். மாணவர் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவர், ஷெரீப் ஓஸ்மான் ஹாதி. இவர் இந்தியாவுக்கு எதிராகவும் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி டாக்காவில் பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தபோது அவாமி லீக் கட்சியின் முன்னாள் நிர்வாகியால் சுடப்பட்டார். ஆர்ப்பாட்டம்:
உயர் சிகிச்சை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி அங்கு உயிரிழந்தார். அவரது மரணம் வங்கதேசம் முழுவதும் வன்முறை போராட்டங்களைத் தூண்டியது; பிரபல செய்தித்தாள்கள் மற்றும் அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. பின் ராணுவம் மற்றும் போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர். அவரது இறுதி சடங்கு அரசு சார்பில் நடந்தது. அதில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பங்கேற்று, ஹாதியின் கொள்கையை தலைமுறைகளுக்கு கடத்துவோம் என உறுதிமொழி ஏற்றார். இந்நிலையில் உயிரிழந்த ஓஸ்மான் ஹாதி நிர்வாகியாக இருந்த இன்குலாப் மஞ்ச் என்ற அமைப்பு அவரது இறப்புக்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் டாக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓஸ்மான் ஹாதியின் சகோதரர் ஒமர் ஹாதி பேசியதாவது: முகமது யூனுஸ் அவர்களே, நீங்கள்தான் ஓசுமான் ஹாதியை கொலை செய்தீர்கள். இதைப் பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்கப் பார்க்கிறீர்கள். விரைவான விசாரணை நடத்தி கொலையாளிகளை கண்டுபிடியுங்கள். தேர்தல் சூழலை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதுவரை அரசு எங்களுக்கு எந்தவித முன்னேற்றத்தையும் இந்த வழக்கில் காட்டவில்லை. ஓஸ்மான் ஹாதிக்கு நீதி கிடைக்காவிட்டால், நீங்களும் ஒருநாள் வங்கதேசத்தைவிட்டு தப்பி ஓட வேண்டியிருக்கும். அடிபணியவில்லை:
எந்த ஒரு அமைப்புக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் அடிபணியாததால்தான் என் சகோதரர் கொல்லப்பட்டார். இவ்வாறு அவர் பேசினார். வங்கதேச இடைக்கால தலைவர் மீது கொலை குற்றம் சுமத்தி, அவரை நாட்டை விட்டு ஓடுவீர்கள் என ஓஸ்மான் ஹாதியின் சகோதரர் பகிரங்கமாக மிரட்டியது அந்நாட்டு அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிவி சேனலை கொளுத்துவோம்
வங்கதேசத்தில் ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் நிலையில், அந்நாட்டின் 'குளோபல் டிவி' செய்தி பிரிவு தலைவர் நஸ்னின் முன்னிக்கு நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21ம் தேதி டாக்காவின் தேஜ்கான் பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு வந்த இளைஞர்கள் குழுவினர், 'நஸ்னின் முன்னியை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும், அவர் அவாமி லீக் ஆதரவாளர்' என எச்சரிக்கை விடுத்தது. அவ்வாறு செய்யாவிட்டால், சமீபத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட 'பிரைம் ஆலோ' மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' அலுவலகங்களைப் போல குளோபல் டிவியும் எரிக்கப்படும் என மிரட்டல் விடுத்தனர்.
இந்தியாவுடன் கைகோர்க்க முடிவு
வங்கதேச இடைக்கால அரசின் நிதி ஆலோசகர் சலேஹுதீன் அகமது, தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்தியாவுடனான பதற்றமான உறவுகளைத் தணிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசு அரசியல் விவகாரங்களை தவிர்த்து பொருளாதார உறவுகளை வளர்க்க முயல்வதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்கா கவலை
அமெரிக்க எம்.பி.,க்கள் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை முழுமையாக தடை செய்ததற்கு கவலை தெரிவித்து அந்நாட்டின் இடைக்கால அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இத்தடை பிப்ரவரி தேர்தலில் சுதந்திரமான ஓட்டெடுப்பு முறையை பாதிக்கும் என எச்சரித்துள்ளனர்.
அரசு பொறுப்பேற்கும்
வங்கதேசத்தின் மைமென்சிங்கில் வதந்தி காரணமாக சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹிந்து இளைஞர் திபு சந்திர தாசுக்கு பெற்றோர், மனைவி, ஒன்றரை வயது குழந்தை உள்ளனர். 'அக்குடும்பத்திற்கான பொறுப்புகளை அரசு ஏற்கும். அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என வங்கதேச கல்வி அமைச்சக ஆலோசகர் அப்ரார் கூறினார்.
குண்டு வீச்சில் ஒருவர் பலி
தலைநகர் டாக்காவில், மோக்பஜார் பகுதியில் உள்ள மோக்பஜார் மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள், நேற்று இரவு 7:30 மணி அளவில், நாட்டு வெடிகுண்டை வீசினர். இந்த குண்டு, சாலையோரக் கடையில் டீ அருந்திய, 21 வயது இளைஞரான சைபுல் என்பவர் தலையில் நேரடியாக விழுந்து வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.