உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேஷியா அதிபராக பதவியேற்றார் சுபியாண்டோ

இந்தோனேஷியா அதிபராக பதவியேற்றார் சுபியாண்டோ

ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் எட்டாவது அதிபராக ராணுவ முன்னாள் அமைச்சர் பிரபோவோ சுபியாண்டோ, 73, நேற்று பதவியேற்றார்.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரியில் நடந்தது. இதில், ராணுவ முன்னாள் அமைச்சரான பிரபோவோ சுபியாண்டோ அபார வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் நாட்டின் எட்டாவது அதிபராக நேற்று பதவியேற்றார். சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அவர் அதிபராக பதவியேற்றார்.நாட்டின் மொத்த மக்கள் தொகையான, 28.2 கோடி பேரில், 90 சதவீதம் பேர் முஸ்லிம்களாக உள்ளனர். உலகிலேயே முஸ்லிம்கள் அதிகளவு வசிக்கும் நாடாக இந்தோனேஷியா உள்ளது. நீண்டகாலம் சர்வாதிகாரத்தில் இருந்த நாடு, தற்போது உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. மேலும், உலகளவில் கிடைக்கும் முக்கிய கனிமங்களில், 25 சதவீதம் இந்த நாட்டில் உள்ளது.பொருளாதாரத்திலும், செல்வசெழிப்பிலும் கொழிக்கும் இந்த நாட்டின் அதிபராக இருந்த ஜோகோ விடோடோ, மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அவரை எதிர்த்து, 2014 மற்றும் 2-019 தேர்தல்களில் போட்டியிட்டார் சுபியாண்டோ. அந்தத் தேர்தல்களின் முடிவுகளை ஏற்க மறுத்து அதிபராக விடோடோ தொடர்ந்தார். அதே நேரத்தில், சுபியாண்டோவை தன் ராணுவ அமைச்சராக, 2019ல் அவர் நியமித்தார்.முன்னாள் ராணுவ ஜெனரலான சுபியாண்டோ, அரசியல் ரீதியில் விடோடோவுடன் மோதல் போக்குடனேயே இருந்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இந்தாண்டு நடந்த தேர்தலில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதும், சுபியாண்டோவை தன் அரசியல் வாரிசாக விடோடோ அறிவித்தார்.இதையடுத்தே, அதிபர் தேர்தலில் சுபியாண்டோ பெரும் வெற்றி பெற்றார். விடோடோவின் மகனான, சுரகர்த்தா முன்னாள் மேயர் ஜிப்ரான் ரகாபுமிங்க் ராகா, 37, தற்போது துணை அதிபராக பதவியேற்றுள்ளார்.இந்தோனேஷியாவின் சர்வாதிகாரியான சுகர்தோவின் மகளை திருமணம் செய்த சுபியாண்டோ, தேர்தலின்போது, விடோடோவின் கொள்கைகளைத் தொடரப் போவதாக அறிவித்தார். ராணுவத்தில் இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக, அதில் இருந்து 1998ல் நீக்கப்பட்டார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவை தங்கள் நாட்டுக்குள் சுபியாண்டோ நுழைவதற்கு தடை விதித்திருந்தன.இந்தோனேஷியாவில் வழக்கு தொடரப்பட்டதால், ஜோர்டானில் தஞ்சமடைந்தார். ஒருநாள் கூட விசாரணைக்கு ஆஜராகாமல், இந்த வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை