பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது காஷ்மீர் தாக்குதலுக்கு ஐ.நா., கண்டிப்பு
நியூயார்க்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், 'எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது' என, தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணியர் மீது, பாக்., பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்; இதில், 26 பேர் பலியாகினர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதை தலைவரும், ஐரோப்பிய நாடான பிரான்சின் நிரந்தர பிரதிநிதியுமான ஜெரோம் போனாபோன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத செயல்கள் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. எந்த சித்தாந்தமும், நோக்கமும் இன்றி அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. அதேபோல், பஹல்காமிலும் நடத்தப்பட்ட தாக்குதலை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள், நிதியளித்தவர்கள், உதவி செய்தவர்கள் உட்பட காரணமான அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை அவசியம். அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச சட்டம் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்கள் அனைத்திற்கும் உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டனி குட்டோரஸ் சார்பில் நேற்று முன்தினம் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், 'இந்த விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தியிருந்தார்.