ரூ.3,431 கோடி சொத்து குவித்த தாய்லாந்து பிரதமர் ஷின்வத்ரா
பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பேடோங்தரன் ஷின்வத்ராவின் சொத்து மதிப்பு 3,431 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக் ஷின் ஷின்வத்ராவின் இளைய மகள் பேடோங்தரன் ஷின்வத்ரா, 38, கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார். பிரதமராக பொறுப்பேற்பவர் தங்கள் சொத்து விபரங்களை அந்நாட்டு தேசிய ஊழல் எதிர்ப்பு கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், தன் சொத்து மதிப்புகளை சமீபத்தில் அந்த கமிஷனிடம் பேடோங்தரன் ஷின்வத்ரா சமர்ப்பித்தார். இதன் விபரங்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, பேடோங்தரன் ஷின்வத்ராவின் மொத்த சொத்து மதிப்பு, இந்திய மதிப்பின்படி, 3,431 கோடி ரூபாய். இதில், 2,737 கோடி ரூபாயை அவர் முதலீடு செய்துள்ளார். உயர் ரக வாட்சுகள், கைப்பைகள் ஆகியவற்றின் ரசிகையான பேடோங்தரனிடம், 40 கோடி ரூபாய் மதிப்பில் விதவிதமான வாட்சுகள் உள்ளன. இதுமட்டுமின்றி 19 கோடி ரூபாய்க்கு கண்ணை கவரும் ரகங்களில் 217 கைப்பைகளையும் இவர் வைத்து உள்ளார். அதேபோல், 200க்கும் மேற்பட்ட டிசைனர்களால் உருவாக்கப்பட்ட வண்ணமயமான பைகளையும் பேடோங்தரன் வைத்து உள்ளது தெரியவந்துள்ளது.இதைத் தவிர்த்து பிரிட்டன், ஜப்பானில் சொத்துகளை இவர் வாங்கி குவித்துள்ளார். அதேசமயம், 1,244 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் பேடோங்தரன் தெரிவித்துள்ளார். இவரின் தந்தையான தக் ஷின் ஷின்வத்ரா, மான்செஸ்டர் நகர கால்பந்து கிளப்பின் உரிமையாளராக இருந்தவர். தாய்லாந்தில் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த தக் ஷின், அந்நாட்டின் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார்.