உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 7வது நாளை எட்டிய போர்: இஸ்ரேல் - ஈரானில் நடப்பது என்ன!

7வது நாளை எட்டிய போர்: இஸ்ரேல் - ஈரானில் நடப்பது என்ன!

டெல் அவிவ்: இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 7 வது நாளை எட்டி உள்ளது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேலிய மருத்துவமனை ஒன்று பலத்த சேதம் அடைந்தது. இதற்கு ஈரானுக்கு பதிலடி தரப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் 7 வது நாளை எட்டி உள்ளது. ஈரானின் நடான்ஸ் நகரில் உள்ள அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இங்கு தான் அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த மையம் அருகே இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானும் கூறியுள்ளது. இங்கிருந்து கதிர்வீச்சு வெளிப்படுவது குறித்த தகவல் ஏதும் இல்லை.

தற்போதைய நிலை

* ஈரான் ஏவிய ஏவுகணையால், இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் உள்ள சோராகா மருத்துவமனை மையம் பலத்த சேதம் அடைந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.* தாக்குதல் காரணமாக பெரும் புகைமூட்டம் எழுந்தது. இதனையடுத்து அவசரகால குழுவினர் உடனடியாக நோயாளிகளை வெளியேற்றினர். அதேநேரத்தில் பழைய அறுவை சிகிச்சை மையம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.* டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஈரான் ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கின. இதில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.* இந்த மருத்துவமனையை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , இந்த தாக்குதலுக்கு ஈரான் முழு விலை கொடுக்க வேண்டியிருக்கும் எச்சரித்து உள்ளார்.* ஆனால், இஸ்ரேலின் ராணுவ தளங்கள் மீது மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகும், ஏவுகணைகள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வுகளால் மருத்துவமனை சேதம் அடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.* சர்வதேச அணுசக்தி முகமை, இஸ்ரேலின் அத்துமீறலில் ஒரு கூட்டாளி போல் செயல்படுகிறது என ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.* இந்த மோதல் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் மூத்த அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் மற்றும் புலனாய்வு பிரிவினருடன் ஆலோசனை நடத்தினார். ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பிரிட்டனின் செயல்பாடு குறித்து அவர் ஆலோசித்தார். * இதனை தொடர்ந்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, அமெரிக்கா கிளம்பி சென்று, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து மத்திய கிழக்கில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.*மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட முக்கியபங்கு வகிக்க தயாராக உள்ளதாக சீனா தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரான், இஸ்ரேல், எகிப்து, ஓமன் உள்ளிட்ட நாடுகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், பதற்றத்தை குறைக்க உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது.* ஈரானில் இருந்த நூற்றுக்கணக்கான ஏவுகணை தளங்களை தாக்கி , பயன்பாட்டில் இல்லாமல் செய்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். இன்னும் ஏவுகணைகளை ஏவும் திறன் அந்நாட்டிடம் உள்ளது எனத் தெரிவித்து உள்ளார்.* வெளிநாட்டின் ஆக்கிரமிப்பை தடுக்க சர்வதேச எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது தங்களின் முன்பு உள்ள ஒருவாய்ப்பு என ஈரான் பார்லிமென்ட் தேசிய பாதுகாப்பு குழு தலைவர் சயீதி கூறியுள்ளார்.* ஈரானில் உள்ள தூதரகத்தை மூடுவதாகவும், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரை திரும்ப அழைத்து கொள்வதாக பல்கேரியா அரசு தெரிவித்து உள்ளது.* ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தலையிட்டால், அது மோசமான முடிவாக இருக்கும் என சிரியாவுக்கான அமெரிக்க தூதர் எச்சரித்து உள்ளார்.* இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானுடனான எல்லையில் பாதுகாப்பை துருக்கி அரசு பலப்படுத்தி உள்ளது.* ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, நாளை ஐரோப்பிய யூனியனின் அதிகாரிகளை நாளை சந்தித்து பேச உள்ளார்.* கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்த போர் விமானங்களை அந்நாடு வேறு இடத்திற்கு மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.* ஜோர்டான் வழியாக வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.* ஈரான் மீதான போரில் அமெரிக்கா தலையிட்டால், அது கணிக்க முடியாத வகையிலான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
ஜூன் 20, 2025 16:05

தீவிரவாத தாக்குதல் நடந்தபொழுது சேகர் எங்கு சென்று இருந்தார்?


ராமகிருஷ்ணன்
ஜூன் 20, 2025 09:42

ஹமாஸ்க்கு காட்டிய வேகம், ஈரான் மீது இல்லையே. இஸ்ரேல் தனது அதி நவீன போர் யுத்திகளை முழு வேகத்தில் காண்பிக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 20, 2025 04:14

ஈரானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில் இடையில் ஒரு நாட்டை வைத்து ஈரான் ஏவுகணை விடுவது சுத்த பயித்தியக்காரத்தனம். இஸ்ரேல் புத்திசாலிகள் வசிக்கும் நாடு. ஈரான் தன்னிடம் இல்லாத அணுவாயுதத்தை வைத்து அவர்களை மிரட்டுவது கிட்டத்தட்ட பேரழிவுக்கு வழிவகுக்கும். பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூரில் இருந்து இன்னும் தப்பிக்கவில்லை என்பதை மறந்து விடக்கூடாது


சேகர்
ஜூன் 20, 2025 12:22

ஈரான் ஏவுகணை விடுவது பைத்தியக்காரத்தனம் என்றால் இஸ்ரேல் ஏவுகணை விடுவது புத்திசாலிதனமா? அணுஆயுதங்கள் ஈரானுடன் மட்டும் உள்ளதா, இஸ்ரேலிடம் இல்லையா? காசாவில் அத்தனை பச்சிளங்குழந்தைகளை கொன்ற போது நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள்?


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2025 20:33

அடுத்த வாரம் கொமைனி வெளிநாட்டிற்கு ஓடிவிடுவார்.


நிவேதா
ஜூன் 19, 2025 21:33

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இரு நாடுகளும் ஏவுகணைகளை பயன்படுத்துகிறார்கள். இன்னும் எத்தனை ஏவுகணைகள் இந்த இரு நாடுகளிடையே இருப்பு உள்ளது என நமக்கு தெரியாது. இஸ்ரேலிடம் ஏவுகணை தீர்ந்தால் அமெரிக்காவை எதிர்பார்க்கும். ஈரானிடம் ஏவுகணை தீர்ந்துவிட்டால் ரஸ்யா அல்லது சீனாவை எதிர்பார்க்கும். யாராவது ஒரு பக்கம் ஆதரவு இல்லாமல் நின்றால் அந்த நாடு அழியும். இரண்டு பக்கமும் ஆதரவின்றி இருந்தால் சமாதான பேச்சுவார்த்தை நடக்கும். எதுவும் நம் கையில் இல்லை. எதுவாக இருந்தாலும் நாம் கவலைப்படவேண்டியது இன்னும் சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்பதே


சமீபத்திய செய்தி