| ADDED : டிச 27, 2025 07:23 PM
பீஜிங்: சீனாவில், 9,842 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங்கின் உய்குர் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 9,842 அடி உயரத்தில், உலகின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலை சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது. இது வடக்கு மற்றும் தெற்கு ஜின்ஜியாங் பகுதிகளை இணைக்கும் உரும்கி - யுலி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையின் நீளம் 22.13 கி.மீ., ஆகும்.இதற்கு முன்பு, தியான்சென் மலைத் தொடரை கடக்க பல மணி நேரம் தேவைப்பட்ட நிலையில், இந்த சுரங்கப்பாதையின் வழியாக வெறும் 20 நிமிடங்களில் கடந்து விட முடியும்.இது, சீனா முன்னெடுத்துள்ள 'பெல்ட் அண்டு ரோடு' எனப்படும், பல நாடுகளை சாலை வழியாக இணைக்கும் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.