அமெரிக்காவுக்கு அரிய கனிமங்கள் தர சீனா சம்மதம் பதிலுக்கு வரியை குறைத்தார் டிரம்ப்
பூசான்: அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள், தென்கொரியாவின் பூசான் நகரில் சந்தித்து, இரு நாடுகள் இடையேயான வர்த்தக பதற்றத்தை தணிப்பதற்கான குறிப்பிடத்தக்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் உலக நாடுகள் மீது அதீத வரி விதிப்பை விதித்து வருகிறார். குறிப்பாக இந்தியா மற்றும் நம் அண்டை நாடான சீனா மீது மற்ற நாடுகளை விட பலமடங்கு வரிகளை விதித்து கடும் நெருக்கடி அளித்து வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, அரிய கனிமங்கள் வினியோகத்தை நிறுத்தியது என, சீனாவுடனான அமெரிக்காவின் மோதல் உச்சத்தை எட்டியது. நடப்பாண்டு ஜனவரியில் பதவியேற்றதும், 10 சதவீத வரிகளை சீனா மீது டிரம்ப் விதித்தார். படிப்படியாக இது உயர்த்தப்பட்டு ஒரு கட்டத்தில், 155 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை கடுமையாக உயர்த்தியது. இந்நிலையில், இரு நாட்கள் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங் நேற்று பூசானில் சந்தித்து, 100 நிமிடங்கள் பேசினர். கடைசியாக இருவரும் 2019ல் சந்தித்தனர். அதற்கு, 6 ஆண்டுக்குப் பின் இந்த சந்திப்பு நடந்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய முடிவுகள்
அமெ ரிக்க, சீன அதிபர்கள் சந்திப்பின்போது எடு க் கப்பட்ட, அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: சீனா பொருட்கள் மீதான 57 சதவீத இறக்குமதி வரியை, 10 சதவீதம் குறைத்து, 47 சதவீதமாக அறிவிக்கப்பட்டது அரிய கனிமங்கள் மீதான தன் ஏற்றுமதி கட்டுப்பா டுகளை சீனா ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கிறது அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி முறைகளில் மாற்றம் செய்ய சீனா முடிவு. சில பொருட்களுக்கான தற்காலிக வரி விலக்கு நீட்டிக்கப்படும் 'பென்டானில்' எனப்படும் மருந்து பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புதல் அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதலை சீனா மீண்டும் துவக்குதல் உள்ளிட்ட வேளாண் வர்த்தகத்தை விரிவாக்க ஒப்புதல் • குறிப்பிட்ட வணிகப் பிரச்னைகளை தீர்ப்பது உள்ளிட்டவற்றில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
வேறுபாடுகள் மோதலாக கூடாது!
இந்த சந்திப்பு குறித்து சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளதாவது: சீனாவும் அமெரிக்காவும் எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் இருப்பதில்லை என்பது இயல்புதான். பெரிய பொருளாதாரங்கள் அவ்வப்போது உராய்வுகளை கொண்டிருப்பது இயல்பான ஒன்றுதான். இதை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதே முக்கியம். இரு தரப்பும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். இரு நாட்டு தலைவர்கள் என்ற முறையில், இரு தரப்பு உறவுகளை சரியான திசையில் வழி நடத்த வேண்டும். 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' என்ற அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தொலைநோக்கு பார்வையுடனேயே, சீனாவின் வளர்ச்சியும் இணைந்து செல்கிறது. இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நல்லதொரு சூழலை உருவாக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பிற விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சு நடத்த சீனா ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மிகப்பெரிய வெற்றி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாவது: இச் சந்திப்பு மிகப்பெரிய வெற்றி. இது வழக்கமான மதிப்பீட்டை விட அதிகம். சோயா பீன்ஸ் உள்ளிட்ட வேளாண் பொருட்களை சீனா உடனடியாக கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது, அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இச்சந்திப்பு, பல மாதங்களாக நீடித்து வந்த வர்த்தக பதற்றத்தைக் குறைத்து, இரு நாடுகளின் உறவை ஒரு நிலையான பாதைக்கு கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான புதிய ஆரம்பம். நீண்ட காலத்திற்கான ஒரு அற்புதமான உறவை இரு நாடுகளும் கொண்டுள்ளது. எங்கள் இருவரிடையே சிறந்த உறவு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.