UPDATED : டிச 01, 2025 08:03 AM | ADDED : டிச 01, 2025 07:33 AM
வாஷிங்டன்: புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, ஆப்கனைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தேசிய காவல் படையைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில், பெக்ஸ்ட்ரோம், 20, என்ற வீராங்கனை முதலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். பின்னர் அவர், அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக வைத்து, தன் குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அறிவித்தார். தற்போது, இந்த சம்பவத்திற்கு ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து, சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவு:மோசமான ஜோ பைடன், 'எல்லை மன்னர்' என்று அழைக்கப்படும் கமலா ஹாரிஸ் ஆகியோர் புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர். இவ்வாறு அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறையின் செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறியதாவது: வெள்ளை மாளிகை அருகே தாக்குதலை நடத்திய அரக்கன் இந்த நாட்டில் ஒருபோதும் இருந்திருக்கக்கூடாது. பைடன் நிர்வாகம் அவரை நாட்டிற்கு உள்ளே வர அனுமதித்தது.இது ஒரு நாசவேலைச் செயலாகும். உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டினர் தொடர்பான அனைத்து குடியேற்ற கோரிக்கைகளையும் செயலாக்குவது காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது, பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நெறிமுறைகளை மேலும் மதிப்பாய்வு செய்யும் வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேசிய காவல்படை வீரர் சாராவின் மரணத்திற்கு ஜோ பைடன் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.