| ADDED : அக் 17, 2025 02:32 PM
வாஷிங்டன்: காசாவில் மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. அமெரிக்கா முன்மொழிந்த அமைதி திட்டத்தின் அடிப்படையில் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது.ஹமாஸ் தன்வசம் இருந்த பிணைக் கைதிகளை விடுவித்தது. இதே போன்று இஸ்ரேலும் தங்கள் நாட்டு சிறையில் இருந்த பாலஸ்தீனியர்களை விடுவிக்கத் துவங்கியது. இதனால் காசாவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஹமாஸ் அமைப்பு காசாவில் உள்ள மக்களை தொடர்ந்து கொன்று வருவதால், அது ஒப்பந்தம் அல்ல. நாங்கள் உள்ளே சென்று அவர்களை (ஹமாஸ் அமைப்பினர்) கொல்வதை தவிர வேறுவழியில்லை. காசாவில் மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.