வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் இன்று (ஜன.,20) பதவியேற்றார். நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.அமெரிக்காவில், கடந்த நவ., 5ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், 78, வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் தோற்கடித்தார். இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள 'கேபிடல்' எனப்படும், அமெரிக்க பார்லியின் உள்ளரங்கில் நடந்த விழாவில், அமெரிக்காவின் 47வது அதிபராக, டொனால்டு டிரம்ப் இன்று (ஜன.,20) பதவியேற்றார்.அமெரிக்க சட்டப்படி, துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வேன்ஸ், முதலில் பதவியேற்றார். அவரை தொடர்ந்து, அதிபராக டிரம்ப் பதவியேற்றார். அமெரிக்காவில் கடுங்குளிர் நிலவுவதால், 40 ஆண்டுகளுக்கு பின், பதவியேற்பு விழா முதன்முறையாக பார்லி., உள்ளே நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன், துணை அதிபர் பதவியில் இருந்து விலகும் கமலா ஹாரிஸ், உலகப் பணக்காரர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பர்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானியும் பங்கேற்றார். நம் நாட்டின் சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில், அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்; ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை ஏற்காத டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க பார்லி.,க்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பின், அதே பார்லியில் அதிபராக டிரம்ப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் டிரம்ப்