ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, வரும் 9 முதல் 16ம் தேதி வரை, இந்திய பயணம் மேற்கொள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்களின் ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவை தவிர எந்த நாடும், தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி, வரும் 6ம் தேதி ரஷ்யா செல்கிறார். அங்கிருந்து, இந்தியா வர அவர் திட்டமிட்டிருந்தார். இந்த சூழலில், முட்டாகியின் இந்திய பயணத்துக்கு, ஐ-.நா., பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இதையடுத்து, அவரின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முட்டாகியின் வருகைக்கு அனுமதி தரக்கோரி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. 'இந்தியாவில் நடக்கவுள்ள உயர் அதிகார கூட்டத்தில், ஆப்கன் அமைச்சர் முட்டாகியின் பங்கேற்பு அவசியம். இந்திய - ஆப்கன் உறவுக்கு இது மிகவும் முக்கியமானது' என, அப்போது வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வரும் 9 - 16ம் தேதி வரையிலான அவரின் இந்திய பயணத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியமைத்த பின், இந்தியாவிற்கு வருகை தரும் முதல் அமைச்சர் அமிர்கான் முட்டாகி என்பது குறிப்பிடத்தக்கது.