| ADDED : டிச 04, 2025 01:41 AM
கீவ்: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்கா முன்னெடுத்துள்ள புதிய சமரச முயற்சி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போரை துவங்கியது. நேட்டோ எனப்படும் சர்வதேச நாடுகளின் ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது. இது தன் இறையாண்மைக்கு எதிரான செயல் என கூறி ரஷ்யா போரில் இறங்கியது. நான்கு ஆண்டுகளை நெருங்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அதிபர் டிரம்பை சந்தித்துவிட்டு சென்று, மீண்டும் உக்ரைன் மீது தாக்குதலை தொடர்ந்தார் ரஷ்ய அதிபர் புடின். இதனால் அந்நாட்டின் இரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் டிரம்ப். இந்நிலையில், அதிபர் டிரம்பின் சிறப்பு துாதரான ஸ்டீவ் விட்காப், சிறப்பு பிரதிநிதி ஜாரெட் குஷ்னருடன் ஆகியோர் நேற்று முன்தினம் ரஷ்யா சென்றனர். அங்கு அதிபர் புடினை சந்தித்து ஐந்து மணிநேரம் பேச்சு நடத்தினர். இதனால் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான அறிகுறி ஏதுமின்றி கூட்டம் முடிந்தது. ரஷ்யா தரப்பில் இருந்து பயனுள்ள பேச்சு நடந்ததாக அறிக்கை மட்டும் வெளியிடப்பட்டது. இந்த சந்திப்புக்கு பின், ஐரோப்பிய நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்தினர். அதில் ரஷ்ய அதிபர் புடின் அமைதியை விரும்புவது போல் நடிப்பதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.