| ADDED : நவ 11, 2025 06:57 AM
வாஷிங்டன் : அமெரிக்காவில்: நிதி மசோதா முட்டுக்கட்டை காரணமாக அமெரிக்காவில் அத்தியாவசிய அரசு துறைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து உள்ளன. இதற்கு விமான சேவைகள் பிரிவும் விதிவிலக்கல்ல. அத்தியாவசிய பணியாளர்களாக கருதப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு காவலர்கள் உட்பட 13,000 பேர், கடந்த அக்., 1ம் தேதி முதல், ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஊதியம் இல்லாததாலும், அதிக பணிச்சுமையாலும் விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு வராமல் விடுப்பு எடுப்பது அதிகரித்துள்ளது. சிலர் தங்கள் பணியை ராஜினாமாவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் பற்றாக்குறையால், நேற்று முன்தினம் 3,300க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10,000 விமானங்களின் சேவைகள் தாமதமாயின. இதற்கு முந்தைய இரு நாட்களும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.