உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம் துாதரகத்தை மூடியது அமெரிக்கா

வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம் துாதரகத்தை மூடியது அமெரிக்கா

கீவ :உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், உக்ரைனில் உள்ள துாதரகத்தை மூடியுள்ள அமெரிக்கா, ஊழியர்களை பதுங்கு குழிகளுக்குள் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்., 22ல் ரஷ்யா போர் தொடுத்தது. 1,000 நாட்களை கடந்து நடக்கும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் நீண்ட துார இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய, ஏ.டி.ஏ.சி.எம்.எஸ்., எனப்படும் ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய ஏவுகணையை வழங்கியது. இந்த ஏவுகணையை உக்ரைன் நேற்று முன்தினம் ரஷ்யாவுக்கு எதிராக ஏவியது. ரஷ்யாவின் பிரயார்க் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய ஆறு ஏவுகணைகளில், ஐந்தை வானிலேயே தடுத்து அழித்தது ரஷ்யா. ஒன்று சேதமடைந்தது. இதனால், ரஷ்யாவில் பெரிய சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி தருவோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் நகரங்கள் மீது பெரிய அளவிலான வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள தங்கள் நாட்டின் துாதரகத்தை அமெரிக்கா மூடியது. துாதரக ஊழியர்களை பதுங்கு குழிகளுக்குள் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டது.

அமெரிக்க கண்ணிவெடி!

ரஷ்யாவின் தரைப்படைகள் உக்ரைன் படைகளை விரட்டியடித்து டானெட்ஸ்க் பகுதியில் முன்னேறி வருகின்றன. ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனுக்குள் மேலும் முன்னேறுவதை தடுக்க, அமெரிக்கா அளித்துள்ள கண்ணி வெடிகளை பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். பீரங்கிகளை அழிக்க, படை வீரர்களை அழிக்க என இருவகை கண்ணிவெடிகளை அமெரிக்கா தயாரிக்கிறது. அதில் படை வீரர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி