அமெரிக்க வர்த்தக குழு வருகை ரத்து: தாமதமாகிறது வரி குறைப்பு பேச்சு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், வரி குறைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, வரும் 25ல் டில்லி வர இருந்த அமெரிக்க வர்த்தக குழுவினரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது போன்ற காரணங்களுக்காக அந்நாட்டில் இறக்கு மதி ஆகும் இந்திய தயாரிப்புகளுக்கு, 25 சதவீத வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இது. ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வந்தது. இங்கு. அமெரிக்க தயாரிப்புகளுக்கு 30 முதல் 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் நிலை வரி என்ற பெயரில் இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதல் 25 சதவீத வரி விதித்தார். இது வரும், 27ல் அமலுக்கு வர உள்ளது. அதற்கு முன்னதாக, வர்த்தக உறவு தொடர்பாகவும், வரி விதிப்பு தொடர்பாகவும் இரு தரப்பும் பேசி வந்தது. ஏற்கனவே அமெரிக்காவின் வர்த்தக குழுவுடன் ஐந்து கட்ட பேச்சு நடத்தப்பட்டது. அதில் சாதகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. வரியை குறைக்க வேண்டும் எனில் நம் நாட்டின் விவசாயம் மற்றும் பால் துறை சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் அணுக அனுமதிக்கும் படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இது சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி கூறிவிட்டார். இந்நிலையில், இந்தியாவுடன் ஆறாம் கட்ட பேச்சுக்காக அமெரிக்க வர்த்தக குழு வரும் 25ல் டில்லி வர இருந்தது. அதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பயணத்தை அமெரிக்க அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இந்த சந்திப்பு வேறொரு நாளில் நடக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த பேச்சு ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இருவரும் கூறினர். அதன்பின் செய்தியாளர்கள், இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'தற்போது அது பற்றி யோசிக்கவில்லை. இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அது பற்றி யோசிப்பேன்' என்றார். இதை வைத்து, டிரம்ப் வரியை குறைக்கும் மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.