குரு கிராமில் குரு பூர்ணிமா
குரு கிராம் ஸ்ரீ தாராமா ஆஸ்ரமத்தில் குரு பூர்ணிமாகொண்டாடப்பட்டது. பக்தர்களும் ஸ்ரீ தாராமா பள்ளி குழந்தைகளும் பங்கேற்று குருவிற்கு தமது வணக்கங்களையும் மரியாதைகளையும் சமர்ப்பித்தனர். குரு பூர்ணிமா என்பது நம் வாழ்வில் உள்ள குருக்களை மரியாதையுடன் வணங்கும் ஒரு சிறப்பு நாள். இந்த பண்டிகையின் மத மற்றும் உணர்ச்சி முக்கியத்துவம் ஆழமானது. ஆனி மாத பௌர்ணமி நாளில், மகரிஷி வேத வியாசர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. வேதங்கள், புராணங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை இயற்றுவதன் மூலம், அவர் சனாதன தர்மத்திற்கு ஆழமான அறிவுசார் அடித்தளத்தை அமைத்தார். எனவே, இந்த நாள் வேத வியாசர் ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை புத்த மதம் மற்றும் சமண மதத்திலும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. புத்தர் ஞானம் பெற்ற பிறகு சாரநாத்தில் தனது முதல் பிரசங்கத்தை இந்த நாளில் நிகழ்த்தினார் என்று நம்பப்படுவதால், அவரை கௌரவிக்கும் விதமாக பௌத்தர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். மேலும் மகாவீரருக்கும் அவரது தலைமை சீடர் கௌதம சுவாமிக்கும் மரியாதை செலுத்துவதற்காக சமணர்கள் குரு பூர்ணிமாவைக் கடைப்பிடிக்கின்றனர். ஆஸ்ரமத்தில் சீரடி சாய்பாபா மூர்த்தி நன்கு அலங்கரிப்பட்டருந்தது. அருகில் பூஜ்ய ஸ்ரீ ஓம்காரநந்தாவின் திரு உருவப்படமும் குரு ஸ்ரீ தாரா மாதாவின் படமும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. குரு பூர்ணிமா சிறப்பு பூஜையை உயர்திரு சந்திரசேகர் அவர்கள் ஆஸ்ரம பண்டிதர் உதவியுடன் நடத்தி குரு ஆராதனை செய்தார். தொடர்ந்து பஜனை நடைபெற்றது. பின்னர் பள்ளி குழந்தைகள் வரிசையில் வந்து குருவிற்கு மலரஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வழிகாட்டிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும், ஞானத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கும் குருக்களின் பங்கை அங்கீகரிக்கும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த குருக்கள் நமது ஆசிரியர்களாகவோ, பெற்றோராகவோ, ஆன்மீக வழிகாட்டிகளாகவோ அல்லது வாழ்க்கையில் நமக்கு சரியான பாதையைக் காட்டிய எந்தவொரு நபராகவோ இருக்கலாம். மேலும் இந்த நாள் ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. - நமது செய்தியாளர் மீனா வெங்கி