உள்ளூர் செய்திகள்

மகாளயபட்சம்

"மறைந்தவர்களுக்கு மகாளயம்" என்பதும் ஒரு பழமொழி. மகாளயம் பட்சம் என்றால் 15 நாட்கள் என்று பொருள். புரட்டாசி வளர்பிறை பிரதமையிலிருந்து, அமாவாசை வரையிலான 15 நாட்கள், முன்னோர்கள், பிதுர் லோகத்தில் இருந்து வந்து, இங்கு, பூமியில் தங்குவார்கள். இந்த நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இக்காலக் கட்டங்களில் ஜாதி, மத வேறுபாடின்றி, முன்னோர் ஆத்மா சாந்தி அடைய, தம்மால் இயன்ற முன்னோர் வழிபாட்டைச் செய்தல் வேண்டும் என நம் பெரியோர்கள் நமக்கு சொல்லி சென்றுள்ளார்கள். இந்த காலத்தில் முன்னோர் வழிபாடு செய்தால், சில பல, பாவ விமோசனம் பெறலாம் என்பதும் ஐதீகம். சனாதன தர்மத்தில் தத்தம் வாரிசுகளின் உதவியின்றி ஆத்மா சாந்தி அடைவது அத்தனை எளிதல்ல என்பர். முறையான முன்னோர்களுக்கான வழிபாடு, இறந்தவர்களின் ஆத்மாவை பிறவா நிலைக்கு எடுத்துச் செல்லும். ஒரு ஆத்மாவை சாந்தியடைந்தபின் அதை செய்பவர் அதற்கான புண்ணிய பலனைத் பெறுவர். இதை தொடர்ந்து செய்பவர்கள், சிரமங்கள் இன்றி, தமது வாழ்க்கைப் பாதையை, மகிழ்வுடன் வழிநடத்துவார்கள் மகாளயத்தில் வரும் அமாவாசை சிறப்பானது, அதுவும் சனிக்கிழமை வருகின்ற அமாவாசை மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் பித்ருக்கள் எனும் மறைந்த நம் முன்னோர்களுக்கு பசி, தாகம் அதிகம் இருக்கும். அதைப் போக்க, கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரங்கள் கூறும். தர்ப்பணம் என்றால், "திருப்திப்படுத்துதல்" என பொருள். அந்த சடங்கில், தர்ப்பையின் மேல் விடும் எள்ளும், அரிசியும், நீரும், அவர்கள் பல நாட்கள் உட் கொள்ளக்கூடிய நல்ல ஒரு உணவாகும். ஆகவே அந்த தர்ப்பணத்தைச் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்ப்பது நம் கடமை. இக்காலங்களில் அன்னதானம் செய்தால், அது பல தோஷங்களை நீக்கும் எனவும் கூறுவர். இறந்தவர் திதி தெரியாத உறவுகள், இக்காலத்தில் திதி கொடுத்து, ஆண்டு தோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். ஆண் வாரிசு இல்லாத பெண்கள், அருகில் உள்ள சிவனார் ஆலயத்தில், மோட்ச தீபம் இட்டு, ஆத்ம சாந்திக்கு வழிபாடு செய்யலாம். எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள், உளமாற வேண்டிக் கொண்டு, பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப் பழங்கள் கொடுப்பது நடைபெறும். இந்த மகாளயபட்சம் வரும் அக்டோபர் 2 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முன்னோர்களை நினைவுகூர்ந்து ஆசிபெறுவோம் - நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !