உள்ளூர் செய்திகள்

பத்ம பூஷண் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டுவிழா

பாரத நாட்டின் உயரிய விருதுகளில் பத்ம விருதுகளும் ஒன்று. விளையாட்டு துறை , சாகசவிருதுகள் திரைப்பட விருதுகள் என்ற வரிசையில் பல துறைகளில் தடம் பதித்த நபர்களை கண்டறிந்து அவர்களின் பணியை பாராட்டி தேசிய அளவில் வருடா வருடம் வழங்கும் விருது பத்ம விருதுகள். இவைகள் பத்ம ஸ்ரீ யில் தொடங்கி பத்ம பூஷண், பத்ம விபூஷண் , பாரத ரத்னா வரை பல அடுக்குகளில் வழங்கப்படுகிறது. இந்த வருடம் சென்னை நல்லி குப்புசாமியின் பணியைப் பாராட்டி பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் சமீபத்தில் வழங்கப்பட்டது. தலைநகர் வந்து விருது வாங்கும் தமிழனை தில்லி தமிழ் சங்கம் பாராட்டி மகிழ்வது தொடர்ந்து வரும் பாரம்பரியம். பாராட்டு விழா தில்லி தமிழ் சங்க வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது விழாவை பாலம் சில்க்ஸ் உரிமையாளர் ஜெயஸ்ரீ ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழ்சங்கப் பொதுச்செயலாளர் இரா.முகுந்தன் வரவேற்புரையை தொடர்ந்து மலை மந்திர் சுவாமிநாத சேவா சமாஜ்ஜின் தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்ச் சங்க துணைத்தலைவர் ராகவன் நாயுடு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தில்லி தமிழ் பள்ளி முன்னாள் தமிழ் ஆசிரியர் சீனிவாசன், "முத்தமிழைப் போற்றும் வள்ளல் முதுமையில் இளமைத் துடிப்பு! உள்ளம்போல் வெளுத்த உடையார் உதவிடும் அன்புக் கரத்தார்! சங்கீதம் என்றால் போதும் சபையெல்லாம் சிறக்கச் செய்வார்! பங்கமில் இதழ்கள் நடத்தப் பாங்குடன் உதவும் மனத்தார்!" என வாழ்த்துக் கவிதை வாசித்தார். தமிழ் சங்க இணைச் செயலர் உமா சத்யமூர்த்தி, பொருளாளர் அருணாசலம், செயற்குழு உறுப்பினர் கள் சுந்தரேசன் தங்கவேல், ரங்கநாதன் உஷாவெங்கட், ரேவதி ராஜன் ஆகியோரும் வாழ்த்தி பேசினர். நிறைவாக நல்லி குப்புசாமி ஏற்புரையில், தலைநகர் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு பெறுவது மகிழ்வான ஒன்று.எண்பது ஆண்டுகாலம் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்து வரும் பெருமைமிகு சங்கத்தில் முதல் பாராட்டு நெஞ்சம் தொட்டது.இது மென்மேலும் சேவை செய்ய ஊக்குவிக்கிறது என்றார். தலைநகரில் செயல்படும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அந்தந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். நிகழ்வுகளை உமா சத்யமூர்த்தி தொகுத்து வழங்கிட அருணாசலம் நன்றி யுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது - நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !