பழங்குடியினருக்கு உதவும் 18 வயது மாணவி
பெங்களூரை சேர்ந்த நிஹாரிகா, 18; கல்லுாரி மாணவி. கர்நாடகா -மற்றும் கேரளாவில் உள்ள பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை கண்டு மனம் வருந்தினார். புராஜெக்ட் ட்ரிபாலி ரேஷன் கார்டு உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள், போதுமான சுகாதாரம், கல்வி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இச்சமூகங்கள் பெரும்பாலும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளனர். பழங்குடி குடும்பங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களின் குரல்களை பிரதிபலிக்கும் நோக்கிலும், 'புராஜெக்ட் ட்ரிபாலி'யை துவக்கினார். தனது இடைவிடாத முயற்சியால், ௧௦௦க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களை, நிஹாரிகா பெற்றுத் தந்துள்ளார். இதனால் அரசின் திட்ட பயன்கள், சேவைகளை அவர்கள் பெற முடிகிறது. பழங்குடியின குழந்தைகளின் கல்வியை ஆதரிப்பதற்காகவும், அவர்களுக்கு புத்தகங்கள், எழுது பொருட்கள், கற்றல் வாய்ப்புகளை வழங்குவதற்கும் நிதி திரட்டுகிறார். கூடுதலாக, சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத தொலைதுார பழங்குடி பகுதிகளுக்கு, மருத்துவ சேவை முகாம்களை நடத்தி உள்ளார். 'ஒவ்வொரு சிறிய அடியும் முக்கியமானது' என்று கூறும் நிஹாரிகாவின் இந்த பயணம், அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது துவங்கியது. 12 வயதில்... இது குறித்து நிஹாரிகா கூறியதாவது: நான் பரதநாட்டிய கலைஞர் என்பதால் எனக்கு அனைத்துவித கலைகள் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. இதை உணர்ந்த என் நடன ஆசிரியர், நாட்டுப்புறம், பழங்குடியின மக்களின் நடனங்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்தார். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அவர்களின் கலாசாரமும், வாழ்க்கை முறையும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், அப்போது எனக்கு 12 வயது தான். இந்த வயதில் என்னால் என்ன செய்ய முடியும். அப்போது தான், '1எம்1பி' என்ற அமைப்பு எங்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்கள் நடத்திய வகுப்பில் பங்கேற்றேன். அப்போது இந்த அமைப்பை துவங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இது தவிர, ஐ.நா., தலைமை அலுவலகத்தில் 2023ல் நடந்த செயல் தாக்க உச்சி மாநாடும் திருப்புமுனையாக அமைந்தது. முதலில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு என் தாயாருடன் சென்று அவர்களுடன் கலந்துரையாடினேன். அப்போது தான், அங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது தெரிந்தது. அடிக்கடி அவர்களின் இருப்பிடத்துக்கு சென்று தேவையை அறிந்து, பல தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.