ஆசிய, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்திய
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழிக்கான அர்த்தம் என்னவென்றால் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்யும் சாதனை பெரிதாக இருக்கும் என்பது தான். இன்றைய இளம்சிட்டுகள் சிறு வயதிலேயே நிறைய சாதனைகளை செய்து வருகின்றனர். பெரியவர்களால் முடியாததை கூட சிறுவர், சிறுமியர் செய்கின்றனர். இவர்களில் ஒருவர் சியா. தாவணகெரே டவுனில் வசிக்கும் சுஜய் - ஐஸ்வர்யா தம்பதியின் மகளான சியாவுக்கு 5 வயது தான் ஆகிறது. 2 வயதில் இருந்தே சியாவுக்கு நினைவாற்றல் அதிகம் இருந்ததால், அவருக்கு பொருட்களின் பெயர்களை பெற்றோர் சொல்லி கொடுக்க ஆரம்பித்தனர். ஓட்டப்பந்தயத்திலும் மகளை பங்கேற்க வைத்தனர். கடந்த 2023ல் தாவணகெரேயில் நடந்த 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 100 மீட்டர் துாரத்தை 40 வினாடிகள் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். சியாவின் தாத்தா கேசவ், தாவணகெரே டவுனில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். தனது பேத்திக்கு மருந்து, மாத்திரைகளின் பெயர்கள், அழகுசாதன பொருட்களின் பெயர்களை சொல்லி கொடுத்தார். இதனை நினைவாற்றல் வைத்து கொண்ட சியா, தாத்தாவுடன் கடைக்கு செல்லும் போது, வாடிக்கையாளர்கள் யாராவது வந்து மாத்திரை, மருந்து பெயர் சொல்லி கேட்கும் போது, முதல் ஆளாக ஓடி சென்று எடுத்து கொடுக்கிறார். தற்போது 74 வகையான மருந்து, அழகுசாதன பொருட்களை சரியாக அடையாளம் காண்கிறார். அவரது திறமையை ஊக்குவிக்கும் வகையில், மருந்து, அழகுசாதன பொருட்களை அடையாளம் காண்பதை அவரது பெற்றோர் வீடியோ எடுத்து, ஆசியா புக் ஆப் ரெக்காட்சுக்கு அனுப்பி வைத்தனர். சியாவின் நினைவாற்றல் திறமையை பார்த்து மெய்சிலிர்த்த, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் அவரது பெயரை சேர்த்து கொண்டது. இதற்கான சான்றிதழையும் அனுப்பி வைத்தது. 5 வயதில் சாதனை படைக்கும் சியாவை நினைத்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். எதிர்காலத்தில் நிறைய சாதனைகளை செய்ய வைக்க தயாராகி வருகின்றனர். - நமது நிருபர் -