ரீல்சில் சாதித்த ராய்ச்சூர் பெண்
இன்ஸ்டாகிராமில் நேரத்தை வீணாக செலவிடுவதற்கு பதிலாக, தங்கள் திறமையை கண்டுபிடித்து, புதுமையான வழியில் செயல்படுத்தி சாதனை படைத்தவர் தான் ஐஸ்வர்யா.ராய்ச்சூர், லிங்கசுகூர் தாலுகா, ஹுலிகுடா கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 23. இவரது தந்தை முனிசாமி கூலித்தொழிலாளி.இவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில், தன் மகள் ஐஸ்வர்யாவை தனியார் கல்லுாரியில் பி.எட்., படிப்பில் சேர்த்து விட்டார்.ஆனால், அவர் படிப்பில் ஆர்வம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.இதனால், அவரது தந்தை, ஐஸ்வர்யாவை கண்டித்தார். ஆனாலும், அவர் தொடர்ந்து ரீல்ஸ் செய்து கொண்டே இருந்ததால், அவரது தந்தை மனமுடைந்து போனார்.ஒரு கட்டத்தில் தந்தையின் வலியை புரிந்து கொண்டவர், தன் தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். அவர் ஆசைப்படியே ஆசிரியையாக வருவேன் என சபதம் போட்டார்.ஆனால், ரீல்ஸ் செய்ததற்காக பலரும் அவரை கிண்டல் செய்தது குறித்து யோசித்து பார்த்து உள்ளார். அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, சாதனை படைக்க முடிவு எடுத்தார்.இதற்காக புதுமையான முறையில் யோசித்து உள்ளார். அரிசியில் தேசிய கீதத்தை கன்னட மொழியில் எழுத துவங்கினார். இதற்காக, பல மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டார். இறுதியாக, கடந்த பிப்ரவரி 5ம் தேதி, 133 அரிசிகளை பயன்படுத்தி, வெறும் 32 நிமிடம், 20 விநாடிகளில் தேசிய கீதத்தை எழுதினார்.இதற்காக, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்தார். இதை பார்த்து, அவரது பெற்றோர் பாராட்டி அகம் மகிழ்ந்தனர். ரீல்சிற்கு அடிமையாகிய அவர், புதுமையான யோசனையாலும், தன் முயற்சியாலும் இச்சாதனையை செய்து சாதித்து உள்ளார்.அரிசியில் தேசிய கீதங்களை கன்னடத்தில் எழுதினார். இதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றினார். இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்தது.இதனால், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கையும் அதிகமானது. பலரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், கருத்துகள் தெரிவித்தனர்; சிலர் அவரை பாராட்டினர். அவரை பார்த்து ஏளனம் செய்தோர் அனைவரும் வாயடைத்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர் - நமது நிருபர் -.