உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம் உருவாக்கி சாதித்த பெண்

குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரம் உருவாக்கி சாதித்த பெண்

கல்லுாரியில் படிக்கும்போதே, குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் வெற்றி பெற்ற பெண், இன்று ஒரு நிறுவனத்தின் தலைவராக ஜொலிக்கிறார். பெங்களூரில் பல லோடுகளை ஏற்றிச் செல்லும் குப்பை வாகனங்களை பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இத்தகைய வாகனங்கள் நம் அருகில் வந்தால், மூக்கை மூடிக் கொள்வோம்; அல்லது வேகமாக கடந்து சென்றுவிடுவோம் அல்லது வாகனத்தை ஓரம் நிறுத்தி, குப்பை வாகனம் சென்றபின் செல்வோம். ஆனால், இதனை சேகரித்து, குப்பை பிரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லும் போது, அங்கு பணியாற்றுவோர் எத்தனை இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பது யாருக்காவது தெரியுமா. சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றால், அங்கு தான் குப்பைகளை கொட்டுகிறோம். இந்த குப்பையை தரம் பிரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து, சாதனை படைத்துள்ளார் 'டிராஷ்கான்' நிறுவனர் நிவேதா. தன் கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது: கல்லுாரி, வீடுகளின் அருகில் கொட்டப்படும் குப்பையை அகற்றுவதை விடுத்து, அனைவரும் மூக்கை மூடிக் கொண்டு கடந்து சென்றுவிடுகின்றனர். மற்றவர்களை போன்று யாராவது வந்து குப்பையை அகற்றுவர் என்ற எண்ணத்தை விடுத்து, நானும், என்னுடன் சிலரும் சேர்ந்து தெருவில் கொட்டப்பட்டிருந்த குப்பையை அகற்றினோம். ஆனால் ஒரு வாரத்திலேயே மீண்டும் பழைய நிலைமையே தொடர்ந்ததால் வேதனை அளித்தது. இது குறித்து நான் படித்த ஆர்.வி., கல்லுாரியில் உள்ள முதன்மை பொறியியல் அதிகாரியிடம், குப்பை பிரச்னை குறித்து தெரிவித்தேன். அவரோ, இதற்கான தீர்வு கண்டுபிடித்த பின், என்னிடம் வரும்படி கூறிவிட்டார். தினமும் இதற்கான இயந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டும் தோல்வியில் முடிந்தது. ஓராண்டுக்கு பின், என் வழிகாட்டியான சவுரப் ஜெயின் உதவியுடன், குப்பை தரம் பிரிக்கும் 'ஸ்ரெட்டர்' மாதிரியை கண்டுபிடித்தேன். இந்த கண்டுபிடிப்பை சோதனை செய்ய, என் கல்லுாரி பேராசிரியை அனுபமா, அவரின் வீட்டு சமையல் அறையை எங்களுக்கு ஒதுக்கினார். இந்த இயந்திரத்தை கண்டுபிடிப்பது எங்களுக்கு அவ்வளவு எளிதாக அமையவில்லை. குப்பை கொட்டும் இடங்கள், குப்பை நிர்வகிப்பு நிறுவனங்களுக்கு சென்று, அவர்களிடம் பேசிய பின்னரே, கண்டு பிடிக்க முடிந்தது. கடந்த 2017ல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் சார்பில் நடந்த 'எலிவேட் 100' கண்காட்சியில், எங்களின் 'டிராஷ்கான்' பங்கு பெற்றது. இதில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்தது. இந்த நிதியுதவியில், இயந்திரங்களை உருவாக்கினோம். பின் முதன் முறையாக சென்னை விமான நிலைய நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து, தினமும் 5 டன் குப்பையும்; அயோத்தியில் சரயு நதி அருகில் 50 டன் குப்பை தரம் பிரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது தரம் பிரிக்கப்படும் குப்பை பிளாஸ்டிக்கில் இருந்து டீ மேஜை, நாற்காலிகள், பள்ளி மேஜைகள் என தரமான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவில், 500 கிலோ, இரண்டு டன், 5 டன், 10 டன் என்ற கணக்கில் இயந்திரங்கள் தயாரித்து தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ