: ரெஸ்டாரென்ட்களில் வீணாகும் நீரை சேமிக்கும் யோசனையை கூறி, 'உலகளாவிய மாற்றத்தை உருவாக்குபவர்' என்ற விருதை 18 வயதிலேயே பெங்களூரு இளம் பெண்கள் இருவர் பெற்று உள்ளனர். பெங்களூரை சேர்ந்தவர்கள் கர்விதா குல்ஹட்டி, பூஜா தனவாடே. இருவரும் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது, அரசு சாரா தொண்டு நிறுவனமான, 'ரீப் பெனிபிட்ஸ்' அமைப்பினர், குடிநீர் வீணாவது குறித்து விளக்கினர். இதனால் ஈர்க்கப்பட்ட இருவருக்கும், அப்போது, 15 வயது தான். முயற்சி நம் நாட்டில் நாள் ஒன்றுக்கு, 14 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாவதை இருவரும் அறிந்தனர். உதாரணமாக, உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிடும் போது, அருகில் கிளாஸ் நிரம்பும் அளவு குடிநீர் ஊற்றப்படுகிறது. ஆனால் வாடிக்கையாளர்களோ, அதில் இரண்டு அல்லது நான்கு மடக்கு மட்டுமே குடிக்கின்றனர். மீதமுள்ள நீர், வீணாக கீழே கொட்டப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு, 'ஒய் வேஸ்ட்' எனும், 'ஏன் வீணாக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வு அமைப்பை இந்த பெண்கள் உருவாக்கினர். இரண்டு ஆண்டுகளாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெங்களூரின் பிரபலமான பகுதிகளில் உள்ள ரெஸ்டாரென்ட்களுக்கு சென்றனர். அங்கு மேலாளரை சந்தித்து, தண்ணீர் வீணாவது பற்றி விளக்கினர். பெரும்பாலான உணவகங்களின் மேலாளர்கள், இவர்களின் எண்ணத்துக்கு செவி சாய்க்கவில்லை. ஆயினும் விடாமல், தங்கள் பள்ளி தோழிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் விளைவாக, பெரும்பாலான உணவகங்களில், தற்போது அரை கிளாஸ் மட்டுமே தண்ணீர் ஊற்றி வருகின்றனர். 42 நாடுகள் குடிநீர் வீணாவதை தடுக்க 2015ல் துவங்கிய 'ஒய் வேஸ்ட்' அமைப்பு, இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு துவங்கிய மூன்று ஆண்டுகளில், உலகளவில் பேசும் அமைப்பாக மாற்றினர். கடந்த 2018ல் சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில், 'உலகளாவிய மாற்றத்தை உருவாக்குபவர்' விருது வழங்கும் விழா நடந்தது. இதில், 42 நாடுகளை சேர்ந்த, 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட 1,000 இளம் தலைமுறையினர் பங்கேற்றனர். இதில், கர்விதா குல்ஹட்டி, பூஜா தனவாடே ஆகிய இருவரும் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குபவர்' விருது பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளனர். மேலும் விபரங்களுக்கு https://www.whywaste.io/ என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். ரெஸ்டாரென்ட் ஒன்றில் பணியாற்றுபவருக்கு, தண்ணீரின் தேவை, வாடிக்கையாளர்களுக்கு எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று விளக்கிய கர்விதா குல்ஹட்டி, பூஜா தனவாடே - நமது நிருபர் -.