சாதனை செய்வதற்கு ஏழ்மை ஒரு தடையல்ல. மன உறுதியும், விடா முயற்சியும் இருந்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதை, ஜூடோ விளையாட்டு வீரர் ஹேப்பிராஜ் நிரூபித்துள்ளார். கலபுரகி நகரின் தாரப்பைல் லே - அவுட்டில் வசிப்பவர் ஹேப்பிராஜ், 16. இவர் ஷகைனா பேப்பிஸ்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை சித்தராஜ், டைல்ஸ் ஒட்டுவது, பிளம்பர் பணி செய்கிறார். தாயார் உஷா, ஆஷா ஊழியராக பணியாற்றுகிறார். மாலை நேரத்தில் ஹோட்டலில் பணியாற்றுகிறார். பெற்றோர் ஏக்கம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்தாலும், ஹேப்பிராஜ் படிப்பில் சுட்டியாக இருக்கிறார். விளையாட்டில் ஆர்வம் காட்டினார். ஜூடோவில் பல சாதனைகள் செய்துள்ளார். 2017ம் ஆண்டு முதல் அவர் ஜூடோ பயிற்சி பெறுகிறார். இரண்டு முறை தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்றுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் நடந்த போட்டியில் நான்காவது இடமும், கேரளாவில் நடந்த போட்டியில் ஆறாவது இடமும் பெற்றிருந்தார். அவருக்கு சரியான பயிற்சி, ஊட்டச்சத்து உணவு இல்லாததால் அப்போது தங்களின் மகனால் வெற்றி பெற முடியாமல் போனது, என பெற்றோர் வருந்துகின்றனர். ஹேப்பிராஜின் திறமையை பார்த்த, ஜூடோ பயிற்சியாளர்கள் அசோக் சூரி, சிவம் ஜோஷி, பிரகாஷ் பயிற்சி அளிக்க துவங்கினர். இதன் பயனாக மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் 10 க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை பெற முடிந்தது. சமீபத்தில் பெலகாவியில் நடந்த, மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் விளையாடி, தங்கப்பதக்கம் பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரில் நாளை முதல் நடக்கவுள்ள ஜூடோ போட்டியில் பங்கேற்கிறார். குறிக்கோள் இவரது விளையாட்டு திறனுக்கு பெற்றோர் மட்டுமின்றி, பள்ளி நிர்வாகமும் ஊக்கம் அளிக்கிறது. மேலும் பதக்கங்கள் பெற்று, மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பதுடன், விளையாட்டு கோட்டாவில் அரசு பணி பெறுவது, ஹேப்பிராஜின் குறிக்கோளாகும் . பெற்றோர் கூறுகையில், 'நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் மகனுக்கு ஊட்டச்சத்தான உணவளிக்க முடியவில்லை. இதே காரணத்தால் இரண்டு முறை அவர் தேசிய அளவிலான போட்டியில் தோற்றார். மணிப்பூரில் நடக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெறுவார் என, நம்புகிறோம். எங்கள் மகனுக்கு அரசிடம் இருந்து நிதியுதவி கிடைத்தால், நல்ல உணவளிக்க உதவியாக இருக்கும்' என்றனர் - நமது நிருபர் - .