உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / மகளிர் கிரிக்கெட்டில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பிரதியுஷா சல்லுரு 

மகளிர் கிரிக்கெட்டில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பிரதியுஷா சல்லுரு 

- கிரிக்கெட் கடவுளாக சச்சின் போற்றப்பட்ட காலகட்டங்களில், ஆடவர் கிரிக்கெட்டிற்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. மகளிர் கிரிக்கெட்டிற்கு ஒரு சில ரசிகர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், தற்போது ஆடவர் கிரிக்கெட் அணிக்கு என்ன வரவேற்பு உள்ளதோ, அதே வரவேற்பு மகளிர் அணிக்கும் உள்ளது. கடந்த 2ம் தேதி நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய மகளிர் அணி முதல்முறையாக 50 ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம் மகளிர் கிரிக்கெட் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று உள்ளது. ஒரு காலத்தில் மகளிர் கிரிக்கெட் அணியில் கர்நாடகாவின் வேதா கிருஷ்ணமூர்த்தி, முக்கிய வீராங்கனையாக இருந்தார். சமீபகாலங்களில் ஸ்ரேயங்கா பாட்டீல் நிலையான இடம் பிடித்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை போட்டிகளில், கர்நாடக வீராங்கனையர் யாரும் அணியில் இல்லை. நன்றாக விளையாடும் பெரும்பாலான வீராங்கனையர், இந்திய அணியில் தங்கள் வாய்ப்புக்காக காத்து இருக்கின்றனர். இவர்களில் பிரதியுஷா சல்லுாரு, 27 என்பவரும் ஒருவர். கர்நாடகாவின் கொப்பா கிராமத்தை சேர்ந்தவர். வலது கை பேட்ஸ்மேனான இவர், சுழற்பந்து வீச்சாளரும் ஆவார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால், 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இந்திய அணியில் இடம் பிடித்தார். அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் ஜொலிக்கவில்லை. இதனால், இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அணிக்கு விளையாட அவருக்கு மீண்டும் அழைப்பு வரவே இல்லை. இதனால் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணியில் இருந்து என்றாவது ஒரு நாள் அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். தனது கிரிக்கெட் பயணம் குறித்து, பிரதியுஷா கூறிய தாவது: என் 7 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுகிறேன். எனது தந்தை, 'டிவி'யில் கிரிக்கெட் பார்ப்பார். அவருடன் சேர்ந்து பார்த்து எனக்கும் கிரிக்கெட்டின் மீது தீராத காதல் ஏற்பட்டது. துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தேன். பயிற்சியாளர் அறிவுரையின் பேரில், சுழற்பந்து வீச்சாளராக மாறி, 'லெக் ஸ்பின்' வீசுகிறேன். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட இந்திய அணிக்கு தேர்வானது பசுமையான நினைவு. அணியில் இருந்து எனக்கு அழைப்பு வந்ததை மறக்கவே முடியாது. அணிக்காக விளையாடி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் ஒரு முறை அழைப்பு வராதா என்று எதிர்பார்க்கிறேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இருந்தால் கிரிக்கெட்டில் நீண்ட துாரம் பயணிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி