உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  குளிருக்கு இதமான சீனி கா பரோட்டா

 குளிருக்கு இதமான சீனி கா பரோட்டா

- நமது நிருபர் - தற்போது குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. குளிருக்கு இதமாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என, பலரும் விரும்புவர். வீட்டில் கோதுமை மாவு இருந்தால், பரோட்டா செய்யலாம். வழக்கமான பரோட்டாவை விட, சீனி கா பரோட்டா செய்து பாருங்கள். இனிப்பு, காரம், புளிப்பு சுவையுடன் கூடிய சீனி கா பரோட்டா, 1990ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி. ஆண்டு தோறும் குளிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இதை செய்வர். சூடான பால் அல்லது ஊறுகாய் தொட்டு சாப்பிடுவர். இப்போதும் பல வீடுகளில், சீனி கா பரோட்டா விருப்பமான சிற்றுண்டி. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என, பார்க்கலாம். தேவையான பொருட்கள் l கோதுமை மாவு - 1 கப் l சர்க்கரை - 2 முதல் 3 ஸ்பூன் l உப்பு- 1 சிட்டிகை l மிளகு பொடி- சிறிதளவு l ஏலக்காய் துாள் - 1 ஸ்பூன் செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில், கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய் துாள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். இதை, 15 நிமிடம் மூடி வைக்கவும். அதன்பின் சிறு, சிறு உருண்டைகளாக்கவும். இவற்றை சப்பாத்தி கல்லில் வைத்து சிறிதாக தட்டவும். அதற்குள் சிறிதளவு சர்க்கரை, மிளகு பொடியை வைத்து மூடவும்.சர்க்கரை வெளியே வராமல், மாவை மீண்டும் உருண்டையாக்கி, சப்பாத்தி தட்டவும். நிதானமாக தட்ட வேண்டும். இல்லையென்றால் சர்க்கரை வெளியே வந்து விடும். இதே போன்று அனைத்து உருண்டைகளையும் தயார் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும் மிதமான தீயில் வைத்து சப்பாத்தியை போட்டு, இரண்டு பக்கமும் நெய் ஊற்றி பொன்னிறமாக வேக வைத்தால் சீனி கா பரோட்டா தயார். சூடான பால் அல்லது ஊறுகாய் தொட்டு கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர். விருப்பப்பட்டால் நெய் தாராளமாக சேர்த்து கொள்ளலாம். மாலை நேரத்தில் பள்ளி விட்டு வரும் குட்டீஸ்களுக்கு செய்து கொடுக்கலாம். குளிருக்கு இதமாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !