வேலையில்லாதோருக்கு வாழ வழி காட்டும் அற்புதம்
ஒருவர் செய்யும் வேலையை வைத்தே அவருக்கு மரியாதை கிடைக்கும் காலத்தில், வேலையில்லாதவர்களின் வாழ்க்கை எத்தனை கொடூரமானது என சிந்தித்து பாருங்கள். அப்படிப்பட்ட, வேலையில்லாதவர்களுக்கு வேலையும் கொடுத்து, அவர்களையே முதலாளியாக மாற்றும் ஒரு உன்னதமான அமைப்பு தான் இது. ஹூப்பள்ளியில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோரை கண்டுபிடித்து, அவர்களில் தகுதியானோரை தேர்வு செய்து, ஜாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் உதவி வரும் அறக்கட்டளை அமைப்புகள் 'தி சாபா கல்வி நலன் மற்றும் தொண்டு அறக்கட்டளை', 'ரஹ்பர் பவுண்டேஷன்'. தள்ளு வண்டி இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து சமீபத்தில் வேலையில்லாதோருக்கு வேலை வழங்கி பெரும் உதவியை செய்து உள்ளன. ஹூப்பள்ளியில் பல பகுதிகளை சேர்ந்த 50 பேருக்கு, அவர்கள் வியாபாரம் செய்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தள்ளு வண்டிகள் வழங்கின. ஜெ.பி., நகரில் உள்ள நியூ டென்னிஸ் பள்ளி மைதானத்தில் வைத்து வழங்கினர். 20 தள்ளுவண்டிகளில் காய்கறிகள், 20 தள்ளுவண்டிகளில் பழங்கள், 10 தள்ளுவண்டிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில், பொருளாதார ரீதியாக உயர முடியும் என அமைப்பினர் கூறினர். இது குறித்து, ரஹ்பர் அமைப்பின் தலைவர் ஆரிப் ராய்ச்சூர் பேசியதாவது: முன்னேற்றம் வேலையில்லாதவர்கள் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறுவதற்காக, 50 பேருக்கு தள்ளுவண்டிகள், பொருட்களுடன் வழங்கப்பட்டன. இதற்காக, நகரின் பல பகுதிகளில் உள்ளவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அவர்களில் பொருளாதாரா ரீதியாக மிகவும் நலிவடைந்தோர் அடையாளம் காணப்பட்டு, உதவி செய்யப்பட்டது. ஜாதி, மத வேறுபாடுகள் கடந்து உதவி செய்யப்பட்டது. இதற்காக, கடந்த 90 நாட்கள் சிரமப்பட்டோம். இதன் மூலம் பயனடைந்தவர்கள், மற்றவர்களுக்கு உதவட்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளி மாரப்பா கூறுகையில், ''எனக்கு இரண்டு கால்கள் கிடையாது. எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். என்னை அடையாளம் கண்டு, தள்ளுவண்டி வழங்கப்பட்டது. இதை வைத்து, என் குடும்பத்தினர் உதவியுடன் வியாபாரம் செய்ய முன்வந்து உள்ளேன்,'' என்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளி மாரப்பா கூறுகையில், ''எனக்கு இரண்டு கால்கள் கிடையாது. எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். என்னை அடையாளம் கண்டு, தள்ளுவண்டி வழங்கப்பட்டது. இதை வைத்து, என் குடும்பத்தினர் உதவியுடன் வியாபாரம் செய்ய முன்வந்து உள்ளேன்,'' என்றார். -நமது நிருபர் -