சு ற்றுச்சூழலுக்கு உகந்த பெட்டி தயாரிப்பில் சாதனை
பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களால் மாசு அதிகரிப்பதால், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில், மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் அட்டை பெட்டிகளை உருவாக்கி சாதித்துள்ளார் பெங்களூரு நபர். பெங்களூரை சேர்ந்தவர் நிகில் பாரேக், 39. 'காகித அட்டை பெட்டிகள் தயாரிப்பு' துறையில் பணியாற்றி வந்தார். இதில், அனுபவம் பெற்ற அவர், பெங்களூரு ராஜாஜிநகரில், 'ஷ்மான்சி' என்ற நிறுவனத்தை நிறுவினார். மறு சுழற்சி தன் அனுபவம் குறித்து நிகில் பாரேக் கூறியதாவது: ஐ.நா., வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளில், பி.பி.ஏ., எனும், 'பிஸ்பெனால் ஏ' என்ற வேதியியல் பொருள் உள்ளது. பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் வைக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதால், குழந்தை பேறின்மை, தைராய்டு, உடல் பருமன் பிரச்னை போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. உலகளவில் ஒன்பது பில்லியன் டன் பிளாஸ்டிக்கில், ஒன்பது சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மற்றவை சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதாக கண்டறிந்து உள்ளனர். பொதுமக்கள் வாங்கும் பொருட்களை வைக்க, பெட்டிகள் செய்ய அதிக செலவாகும் என்பதால், மலிவு விலையில் விற்கும் பிளாஸ்டிக் காகிதங்களில் பொருட்களை வைத்து எடுத்து செல்கின்றனர். இதனால், ஏற்படும் உடல் பாதிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே, உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படக்கூடாது என்பதற்காக, 2016ல், 'ஷ்மான்சி பேக் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தை துவக்கினேன். எங்களிடம் விற்கப்படும் பெட்டிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் செய்யப்பட்டவை. வரவேற்பு நாங்கள் இந்நிறுவனத்தை துவங்கிய நேரத்தில் ஆன்லைனில் உணவு வினியோகம், மின் வணிகம் அதிகரிக்க துவங்கியது. இதற்காக முகநுாலில் விளம்பரம் செய்தோம். முதல் நாளிலேயே எங்களுக்கு, 200க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வந்தன. வீட்டில் இருந்தபடி பல சிறிய வணிகம் செய்வோருக்கு, தரமான பெட்டிகளை வழங்க முடிவு செய்தோம். எனது நண்பர்களும், அவர்களின் தொழிலுக்கு தேவையான பாக்கேஜ்களை தேடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயில், 5,000 பெட்டிகளை செய்து கொடுத்தேன். இப்போது அவர்கள் கேட்கும் அளவுக்கு தேவையான ப ெ ட்டிகளை செய்து தருகிறேன். இது தவிர, பல்வேறு டிசைன்களில் பெட்டிகள், பைகள் தேவைப்படுவோர், எங்களின் இணையதளம் மூலம், அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு தேவையான பெட்டிகளை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். நாடு முழுதும் 4,000 வாடிக்கையாளர்கள், எங்களிடம் பெட்டிகளை வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -: . மேலும் விபரங்களுக்கு 91138 49088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.