உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  ஜனாதிபதி முர்மு கவுரவித்த கதக் ஓவியர் கமல் அகமது

 ஜனாதிபதி முர்மு கவுரவித்த கதக் ஓவியர் கமல் அகமது

- நமது நிருபர் -: கதக் மாவட்டத்தை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கமல் அகமது மாலேகோப்பா. இவர், 'மினியேச்சர்' எனப்படும், சிறிய அளவிலான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர். இவரது ஓவியங்களுக்கு தேசிய அளவில் பாராட்டுகள் குவிந்தன. புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில், சமீபத்தில் நடந்த, 10 நாள், உறைவிட கலைஞர் திட்டத்தில் பங்கேற்றார். நாட்டின் பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாக்கும் நோக்கில், இந்த நாட்கள் நடத்தப்பட்டன. இதில், கமல் அகமது உட்பட பல மாநிலங்களை சேர்ந்த, 12 ஓவியர்கள் பங்கேற்றனர். ராஷ்டிரபதி பவன், பஞ்சதந்திர கதைகளை மையப்படுத்தி கமல் அகமது இரண்டு ஓவியங்களை வரைந்தார். இந்த நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைத்து ஓவியங்களையும் பார்வையிட்டார். ஓவியங்கள் குறித்து ஓவியர்களுடன் உரையாடினார். அப்போது, கமல் அகமதுவின் ஓவியத்தை திரவுபதி முர்மு பாராட்டி கவுரவித்தார். இது குறித்து, கமல் அகமது கூறியதாவது: நான், 30 ஆண்டுகளாக ஓவியம் வரைகிறேன். அதிலும் மினியேச்சர் ஓவியங்களை அதிகமாக வரைகிறேன். உடுப்பி மாவட்டம் ஹெப்ரி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 18 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன். ராஷ்டிரபதி பவனில் நடந்த ஓவிய நிகழ்வில் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு எனது ஓவியத்தை பாராட்டியதை வாழ்வில் மறக்க மாட்டேன். இது எனக்கு மேலும் அங்கீகாரத்தையும், உற்சாகத்தையும் அளித்து உள்ளது. இளம் தலைமுறையினர் ஓவியங்கள் மீது ஆர்வம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்