உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / இயற்கை காதலன் நாகராஜின் வித்தியாச நடை பயணம்

இயற்கை காதலன் நாகராஜின் வித்தியாச நடை பயணம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவர் நாகராஜ் ராகவ் அஞ்சன், 31. இவர் ஐ.டி., நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் மீது அதீத ஆர்வம். இதன் காரணமாக பல சுற்றுச்சூழல் பணிகளை செய்து வருகிறார். கடற்கரை பகுதிகளில் பலரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசி செல்வதை பார்த்து மனம் உடைந்தார். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கார்வாரிலிருந்து மங்களூரு வரை 300 கி.மீ., துாரம் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தை கடந்த மாதம் 27ம் தேதி துவங்கினார். தொடர்ச்சியாக எட்டு நாட்கள் 300 கி.மீ., நடக்கிறார். நாளையுடன் நடைபயணத்தை முடிக்கிறார். பிளாஸ்டிக் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விவரிக்கும் பதாதையையும் கையில் ஏந்தி நடக்கிறார். இவர் தனது நடைபயணத்தின் போது பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். ஒரு நாளைக்கு 40 கி.மீ., துாரம் நடக்கிறார். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடைபயணமாக நடக்கிறார். இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பத்து கிராம பஞ்சாயத்துகளை, பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கிராமங்களாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்து உள்ளார். இதற்கான முயற்சியிலும் வருங்காலத்தில் ஈடுபட உள்ளார். இது குறித்து நாகராஜ் கூறியதாவது: நான் ஒரு முன்னாள் கபடி வீரர். இந்த நடைப்பயணம் உடல் நலம் குறித்தது அல்ல; சுற்றுச்சூழல் பாதிப்பு சம்பந்தப்பட்டது. ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். இதனால் உடல் சோர்வு ஏற்படுவதை தடுக்கிறது. எனது பையில் குளுக்கோஸ், முதலுதவி மருந்துகள் ஆகியவை வைத்திருப்பேன். முதன் முதலில் 2021ம் ஆண்டு மங்களூரு முழுதும் உள்ள நெடுஞ்சாலைகளில் நடைப்பயணம் மேற்கொண்டேன். ஆற்றங்கரையில் குப்பை கொட்டக்கூடாது என அமைதியான முறையில் போராட்டம் நடத்தினேன். நேத்ராவதி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி உள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை