உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலம் என பெற்றோர் பூரிப்பு

குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலம் என பெற்றோர் பூரிப்பு

'தமிழுண்டு, தமிழர் உண்டு, தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வரும் 'தினமலர்' நாளிதழின் பவள விழா; தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 117ம் ஆண்டு பிறந்த நாள்; நாளை உலகை ஆளும் இன்றைய மழலையர்களின் அறிவுக்கண் திறக்கும் அரிச்சுவடி ஆரம்பம் என, முப்பெரும் விழா அக்., 2ம் தேதி பல பரிமாணங்களுடன் நடந்தது.

தமிழர் மரபு

பெங்களூரில் எந்த நாளிதழும் செய்யாத 'வித்யாரம்பம்' பல எதிர்பார்ப்புகளுடன் துவங்கியது. விழா நடந்த சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் வளாகத்தின் நுழைவு வாயிலில் கண் சிமிட்டும் பலுான்கள் அனைவரையும் வரவேற்றன. வாசகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்த 'தினமலர்' நடத்தும் விழாவுக்கு வந்த தாய்மார்கள் பன்னீர் தெளித்து, மல்லிகைப்பூ, மஞ்சள், குங்குமம் வழங்கி தமிழர் மரபுடன் வரவேற்கப்பட்டனர். இத்திருவிழாவை வாசகர்கள், தங்கள் குடும்ப விழாவாக கருதி, முதியோரையும் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தனர். நாதஸ்வரம் இன்னிசையுடன் கல்விக்குரிய சிறப்பு பூஜைகள் நடந்தபோது, வாசகர்கள் அனைவரும் பக்தியுடன் எழுந்து நின்று வணங்கியது, தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றியது. ஒன்றல்ல... இரண்டு... குத்துவிளக்கு ஏற்றி, தமிழ்த்தாய் பாடல், கன்னட மொழிப் பாடல் பாடப்பட்டதன் மூலம் தமிழர்- - கன்னடர் இணைந்து வாழும் ஒற்றுமையை எடுத்துக் காண்பித்தது.

ஆண்டு சந்தா

'தினமலர் வாசகர்களே... எங்கள் உறவுகளே... நீங்கள் இப்போதே ஆண்டு சந்தா உறுப்பினர் ஆகுங்களே' என்று அன்புடன் எடுத்துரைத்தது தொழிலின் மேன்மையை உணர்த்தியது. மழலைச் செல்வங்களை நெல்மணியில் விரலி மஞ்சளால் 'அ'னா... 'ஆ'வன்னா எழுத வைத்தபோது, மகிழ்ச்சியில் திளைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். 'இன்றைய மழலையர் வருங்கால துாண்கள்' என வாயார வாழ்த்தி, 'நன்றாக படிக்க வேண்டும்' என்று மழலையை துாக்கி, கட்டியணைத்து பரவசப்படுத்தி, பிஞ்சு விரல் பிடித்து எழுத வைத்ததை, எழுச்சிமயமான நிகழ்வாக பார்க்கிறேன். நான் சிறுவயதில் 'சிறுவர் மலர்' படித்த நினைவுகள், என்னை கல்வியறிவில் சிறந்து விளங்க செய்தது' என, விழா சிறப்பு விருந்தினரான டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெருமைப்பட கூறினார். 'இதை விட வேறு என்ன வேண்டும்' என பலரும் பெருமிதம் கொண்டனர். பெங்களூரின் அனைத்துபகுதிகளிலிருந்தும் தமிழ்க் குடும்பத்தினர் வந்திருந்தனர். இவ்விழா, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அடித்தளமிடும் விழா என பெற்றோர்களின் சொல்லாக ஒலித்தது.

பிற மொழியினர்

தமிழர் அல்லாத பிற மொழியினரும் கூட விழா நடக்கும் விபரம் அறிந்து அரிச்சுவடி ஆரம்ப விழாவில் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். கல்வி கடவுளான சரஸ்வதிக்கு பூஜை செய்து, தங்கள் குழந்தைகளின் எழுத்தறிவை துவக்கிய தினமலருக்கு நன்றி என, தாங்கள் அறிந்த மொழியிலேயே கூறி மகிழ்ந்தனர். மொத்தத்தில் பெங்களுரு வித்யாரம்பம் விழாவில் பலரும் மனங்குளிர்ந்ததாக திளைத்தனர். அறிவுப்பட்டறைக்குள் கால்பதிக்க ஆயத்த மாகும் மழலையருடன் பெற்றோரும், அவர்களின் உற்றார், உறவினரும் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் இனிதான ஆரம்பம் என ஆராதித்தனர்.

வாரிசின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இட்ட 'தினமலர்'

எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பொறியாளர், தம் பிள்ளையை அழைத்து வந்திருந்தார். 'நான் தமிழகத்தை தாயகமாக கொண்டவன். தொழில் நிமித்தமாக பெங்களூரில் குடியேறினாலும், எங்களின் நெருக்கமான தொடர்பு இன்றும் தமிழகத்தோடு தான். என் தாத்தா, தந்தை காலம் தொடர்ந்து, நானும் ஒரு தினமலர் வாசகர்; தினமலர் படிக்காமல் இருந்ததே இல்லை. இது அறிவார்ந்தோரின் கையேடாக மதிக்கிறோம். தரமான தகவலுக்கு தினமலர் சேவை தொடர வேண்டும். அரிச்சுவடி விழாவில் பங்கேற்பது, என் வாரிசின் எதிர்காலத்தை தினமலர் அஸ்திவாரம் உயர்த்தும் என நம்பிக்கையில் உள்ளேன்,'' என்றார். * ஒயிட் பீல்ட் பகுதியின் ஐ.டி., நிறுவன பெண் ஊழியர் கூறுகையில், ''சம்பிரதாயப்படி விஜயதசமியின்போது பிள்ளைகளுக்கு நெல் மணியில் அகர எழுத்து எழுத செய்வது வழக்கம். இதை ஒரு திருமண விழாப் போல நடத்தி தினமலர் குடும்பத்தினர் அசத்திவிட்டனர். பத்திரிகை உலகில் பெரும் புரட்சி என்றால் மிகையாகாது. இது போன்ற விழா, ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என்பதே பெங்களூரு மக்களின் எதிர்ப்பார்ப்பு,'' என்றார். * மழலையரிடம் 'கல்வி கிட்' வாங்கின ஆர்வமும், சான்றிதழை பெற்றதன் மகிழ்ச்சியும் ஓடாமல் ரன் எடுத்தது போல் பள்ளிக்குள் நுழையும் முன்பே, தம் பிள்ளை சான்றிதழ் வாங்கியதை பெற்றோர் பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த சான்றிதழை தங்கள் எங்கள் வீட்டில் பிரேம் போட்டு சுவற்றில் மாட்டுவதாக ராஜாஜி நகரை சேர்ந்த ஒரு பெற்றோர் கூறினர். சிறுமலர்களான மழலையர்கள் அரிச்சுவடி எழுத ஆரம்பிக்கும் காட்சியை உடனுக்குடன் இன்ஸ்டென்ட் போட்டோ வழங்கப்பட்டது பிரமாதம். இது தங்கள் குடும்பத்தின் பொக்கிஷம் என கூறியவாறு, இந்திரா நகரின் பெற்றோர், தங்கள் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை