உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / மண்ணில்லாமல் குங்குமப்பூ விளைவிக்கும் மென்பொறியாளர்

மண்ணில்லாமல் குங்குமப்பூ விளைவிக்கும் மென்பொறியாளர்

காஷ்மீர் அனைவருக்கும் பிடித்தமான இடம். பூமி மீதான சொர்க்கம் என, அழைக்கப்படுகிறது. காஷ்மீர் என்றவுடன் வெள்ளை வெளேர் என்ற பனிப்போர்வை, நம் நினைவுக்கு வரும். சாலை ஓரங்களில் தென்படும் வண்ண மயமான பூக்கள், குங்குமப்பூ வயல்கள் நம் கண் முன்னே வந்து செல்லும்.காஷ்மீரில் கோடைக்காலத்தில் பூத்து குலுங்கும் பூக்கள் மிகவும் பிரபலம். கேசரி க்ரோகஸ், காஷ்மீரி ஐரிஸ், ரோஜா, ஹிமாலயன் இன்டிகோ, கார்னேஷன், மாரி கோல்டு உட்பட, பல பூக்கள் வளர்கின்றன. குறிப்பாக குங்குமப்பூவுக்கு, மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகம். இத்தகைய பூவை, உடுப்பியில் மென்பொறியாளர் ஒருவர், தன் வீட்டு மாடியில் வளர்த்துள்ளார்.

செடிகள்

ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றும் அனந்தஜித் தந்த்ரி, தன் நண்பருடன் இணைந்து தன் வீட்டு மாடியில் குங்குமப்பூ வளர்த்துள்ளார். 'ஏரோபோனிக்ஸ்' விவசாய முறைப்படி, குங்குமப்பூ வளர்த்துள்ளார். ஏரோ போனிக்ஸ் என்பது, மண்ணில்லாமல் செடிகள் வளர்க்கும் முறையாகும்.வேர்கள் காற்றில் மிதக்கும். புரதச்சத்து கொண்ட பனி மூலம் பராமரிக்கப்படுகிறது. குங்குமப்பூ விதைகளை ஆன்லைனில் வரவழைத்து, மண்ணில் விதைத்தார். ஆனால் சரியாக விளையவில்லை. எனவே பெலகாவிக்கு சென்று பயிற்சி பெற்றார் ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பம் மூலம், குங்குமப்பூ வளர்க்கலாம் என, தெரிந்து கொண்டார். உடுப்பியின், பைலுாரில் உள்ள தன் வீட்டு மாடியில் உள்ள அறை ஒன்றில், குங்குமப்பூ வளர்க்க ஆரம்பித்தார்.180 சதுர அடி கொண்ட அறையில், 'குரோகன் சாடிவஸ்' என்ற வகையை சேர்ந்த குங்குமப்பூ வளர்க்கிறார். நடப்பாண்டு 110 கிலோ விளைந்துள்ளது. வரும் அக்டோபரில் அறுவடை செய்யப்படும்.அனந்தஜித் தந்த்ரி கூறியதாவது:குங்குமப்பூ விவசாயம் செய்ய, முதலீடு தேவைப்பட்டது. அரசின் திட்டத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றும், மிச்ச தொகையை என் கையில் இருந்தும் செலவிட்டு, விவசாயத்தை துவக்கினேன்.மண் இல்லாமல் பயிர் செய்தாலும், குங்குமப்பூ நன்றாக விளைகிறது. அறைக்குள் காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இது குங்குமப்பூ வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு நல்ல டிமாண்ட் உள்ளது. உணவு மற்றும் குளிர்பான தயாரிப்புக்கு குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கிராம் ரூ.400

பேக்கரிகள், கடைக்காரர்கள், என்னிடம் வந்து குங்குமப்பூ வாங்குகின்றனர். பூக்களின் இதழ்கள் கிலோவுக்கு 20,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. குங்குமப்பூவின் மார்க்கெட் விலை ஒரு கிராமுக்கு 400 ரூபாயாகும். கடந்தாண்டு 37 கிராம் விளைச்சல் கிடைத்தது.என் நண்பர் அக்ஷித், குங்குமப்பூ அறுவடைக்கும், உலர வைக்கவும், விற்பனைக்கும் உதவுகிறார். நாங்கள் விளைச்சலுக்கு எந்த ரசாயனமும் பயன்படுத்துவது இல்லை. கிருமி நாசினி குணம் கொண்ட வெப்ப எண்ணெயை தெளிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை