உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / மலையேற்றம் செய்வோருக்கு சிறந்த இடம் மங்களூரு எடகுமேரி

மலையேற்றம் செய்வோருக்கு சிறந்த இடம் மங்களூரு எடகுமேரி

மலையேற்றம் செய்வோரில் சிலருக்கு சாகசம் நிறைந்ததாக இருக்க வேண்டும்; சிலருக்கோ பசுமையை ரசித்தபடி செல்ல வேண்டும். இவ்விரண்டையும் 'எடகுமேரி' மலையேற்றம் பூர்த்தி செய்யும்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் இருந்து 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள எடகுமேரி. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்துள்ள மலையேற்ற பகுதியாகும். குறிப்பாக, டோனிகல் - எடகுமேரி இடையேயான 17 கி.மீ., வழித்தடம், வார்த்தைகளால் விவரிக்க முடியாது.இந்த பாதை முன்னர், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இயற்கை ஆர்வலர்கள், மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஒரு புறம் பள்ளத்தாக்கு, மற்றொரு புறம் மலை. இவ்விரண்டுக்கும் இடையில் பயன்படாத ரயில் தண்டவாளத்தில் இயற்கையை ரசித்தபடி நடந்து செல்லலாம்.இப்பயணத்தில், நீங்கள் பல சுரங்கங்கள், பாலங்கள், பயன்படுத்தாத ரயில் நிலையங்களை கடந்து செல்ல நேரிடும். அடர்ந்த வனப்பகுதியில் செல்வதால், நகரங்களில் நீங்கள் பார்த்திராத பல்வேறு தாவரங்களை இங்கே காணலாம். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், பல்வேறு வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகள், வன விலங்குகளை கூட காணலாம்.மூடுபனியால் மூடப்பட்ட மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் உங்களை மெய்மறக்க செய்யும். 0.75 கி.மீ., நீளமுள்ள சுரங்கப்பாதை அமைந்துள்ளது.நீங்கள் ஓய்வெடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.அத்துடன் மலையேற்றத்தின் அழகை மேலும் மெருகேற்றும் நீர்வீழ்ச்சிகளும், நீரோடைகளும் உள்ளன. நீங்கள், தண்டவாளங்களில் நடந்து செல்லும்போது, மலையில் இருந்து கீழே விழும் பல சிறிய, பெரிய நீர்வீழ்ச்சிகளை காணலாம்.இப்பாதையில் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சி, 'துாத்சாகர் நீர்வீழ்ச்சி'யாகும். கேஸ்டல் ராக் ரயில் நிலையம் அருகில் கம்பீரமான நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. 310 மீட்டர் உயரத்தில் இருந்து வெள்ளி உருகி கீழே கொட்டுவது போன்று காட்சி அளிக்கும்.இந்த மலையேற்றத்தில் பல இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு உங்களின் கூடாரம் அமைத்து, நட்சத்திரங்களை ரசித்தபடி இரவை போக்கலாம். குளிர்ந்த காற்று, பறவைகளின் சத்தம், நெருப்பின் அனல் உங்களை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்வது போன்று தோன்றும்.இந்த பசுமை வழித்தட ரயில் பயணம், இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்றாகும்.கைவிடப்பட்ட ரயில் பாதைகளை ஆராய்வதற்கும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் தீண்டப்படாத அழகை காண்பதற்கும் இது தனித்துவமான வாய்ப்பாக இருக்கும்.

13_Article_0001, 13_Article_0002

சுரங்கப்பாதைக்கு செல்லும் பழைய ரயில் பாதை. (அடுத்த படம்) துாத்சாகர் நீர்வீழ்ச்சி.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 138 கி.மீ., தொலைவில் உள்ள எடகுமேரிக்கு, பஸ், டாக்சியில் செல்லலாம். ரயிலில் செல்வோர், டோனிகல் ரயில் நிலையத்தில் இறங்கலாம். அங்கிருந்து எடக்குமேரிக்கு பசுமை வழித்தடத்தை பயன்படுத்தலாம் பஸ்சில் செல்வோர், சக்லேஸ்புரா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டோனிகல் ரயில் நிலையம் சென்றடைய வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை